மாவட்டம் முழுவதும் தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம் ஏராளமானோர் கைது


மாவட்டம் முழுவதும் தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம் ஏராளமானோர் கைது
x
தினத்தந்தி 27 Nov 2020 8:11 PM IST (Updated: 27 Nov 2020 8:11 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.

திருமங்கலம்,

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது, அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஏழை குடும்பங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்தி நகரங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை முன்பு, பல்வேறு தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று காலை திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு மதுரை ரெயில் நிலையம் அருகில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக மதுரை எம்.பி. வெங்கடேசன் இந்த பேரணியை தொடங்கி வைத்தார். போராட்டத்தில் ஈடுபட்ட 1100 பேரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எல்.ஐ.சி. ஊழியர்கள்

மதுரை செல்லூர் பகுதியில் உள்ள எல்.ஐ.சி. கோட்ட அலுவலகத்தில் கோட்ட சங்க தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ரமேஷ் கண்ணன், மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ரமேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருமங்கலத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்க போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் மறியல் நடைபெற்றது. போராட்டத்திற்கு தெற்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் கதிரேசன் தலைமை தாங்கினார். ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட 110 பேர் கைது செய்யப்பட்டனர்.

சோழவந்தான்

சோழவந்தான் மாரியம்மன் கோவில் சன்னதி அருகில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட நிர்வாகி ஜெயக்கொடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் வேல்பாண்டி ஆகியோர் முன்னிலையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில், தி.மு.க. பொறுப்புக்குழு தலைவர் பசும்பொன்மாறன், இந்திய கம்யூனிஸ்டு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜோதிராமலிங்கம், ஒன்றிய செயலாளர் மூர்த்தி உள்பட 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

பேரையூர்

மேலூரில் பஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் 80 பேரை போலீசார் கைது செய்தனர். டி.கல்லுப்பட்டி ஒன்றிய சி.ஐ.டி.யூ. சார்பாக டி.கல்லுப்பட்டியில் கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மணிகிருஷ்ணன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 81 பேரை போலீசார் கைது செய்தனர்.

அலங்காநல்லூர் கேட்டு கடையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் குமரேசன் தலைமையில், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை தலைவர் ஆஞ்சி முன்னிலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர். உசிலம்பட்டி பஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட 82 பேரை போலீசார் கைது செய்தனர். எழுமலை பழைய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த 12 பேரையும், எம். கல்லுப்பட்டி பஸ்நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட 72 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

திருப்பரங்குன்றம், புதூர்

மதுரை புறநகர் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பாக திருநகரில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மதுக்கூர் ராமலிங்கம், சி.ஐ.டி.யூ. பாண்டி, சேதுராமன் உள்பட 135 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை கிழக்கு ஒன்றியம் ஒத்தக்கடையில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் பொன்னுத்தாயி உள்பட 125 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story