80 கி.மீ. வேக காற்றுடன் கடந்த ‘நிவர்’ புயல்: வெள்ளத்தில் மிதக்கும் கடலூர் 9 மணி நேரத்தில் 20 செ.மீ. மழை கொட்டியது


80 கி.மீ. வேக காற்றுடன் கடந்த ‘நிவர்’ புயல்: வெள்ளத்தில் மிதக்கும் கடலூர் 9 மணி நேரத்தில் 20 செ.மீ. மழை கொட்டியது
x
தினத்தந்தி 27 Nov 2020 9:27 PM IST (Updated: 27 Nov 2020 9:27 PM IST)
t-max-icont-min-icon

80 கி.மீ. வேக காற்றுடன் கடந்த ‘நிவர்’ புயலால் கடலூரில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது.

கடலூர், 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. வங்க கடலில் கடந்த 21-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ‘நிவர்’ என்னும் அதிதீவிர புயலாக மாறி தமிழகம் மற்றும் புதுச்சேரியை மிரட்டியது. இதன் எதிரொலியாக கடலூர் துறைமுகத்தில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

புயல் கடலூரை நெருங்கி வரத் தொடங்கியது முதல் கடலூர் மாவட்டத்தில் மழைப்பொழிவு தொடங்கியது. நேற்று முன்தினம் காலை தொடங்கி பரவலாக மழை பெய்தது. இதில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை நிறைவடைந்த 8 மணி நேரத்தில் அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 9 செ.மீ. மழையும், கடலூரில் 7½ செ.மீ. மழையும் கொட்டியது.

80 கி.மீ வேகத்தில் காற்று வீசியது

அதிதீவிர புயலாக மாறி நேற்று முன்தினம் இரவு 10.30 மணி முதல் கரையை கடக்க தொடங்கி, நள்ளிரவு 2 மணிக்கு புயல் முழுவதும் கரையை கடந்தது. இந்த சமயத்தில் கடலூர் மாவட்டத்தில் மழை தீவிரம் அடைந்து வெளுத்து வாங்கியது. அதேவேளையில் சூறைக்காற்றும் வீசியது.

நேற்று முன்தினம் மாலை வரைக்கும் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. ஆனால் இரவில் இதன் வேகம் அதிகரித்து 55 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. நள்ளிரவு 12.10 மணி அளவில் அதிகபட்சமாக சுமார் 80 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசியது. குறிப்பாக கடற்கரையையொட்டி உள்ள கிராமங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. கடல் அலைகளும் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

புயல் முழுவதும் கரையை கடக்கும் வரைக்கும் மழையின் தீவிரம் ஓய்ந்தபாடில்லை. அவ்வப்போது ஓய்வெடுத்து அதி கனமழையாக கொட்டித் தீர்த்து. இதனால் கடலூர் நகரமே வெள்ளக்காடானது. குறிப்பாக கடலூர் ஸ்டேட் பேங்க் காலனி, நத்தவெளி ரோடு, கூத்தப்பாக்கம், மணலி எஸ்டேட், தானம் நகர், பாதிரிக்குப்பம், வண்ணாரப்பாளையம், கடலூர் முதுநகர் பனங்காட்டு காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 2 ஆயிரம் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததுடன், வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் தூக்கத்தை தொலைத்த மக்கள், தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் மழையின் தீவிரம் குறையாததால் இதற்கு பலனளிக்கவில்லை. இதனால் புயல் மழைக்கு இடையே பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். புயல் காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதை இரவோடு இரவாக மீட்பு குழுவினர் வெட்டி அகற்றினர். இதுதவிர பல்வேறு இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் முன்பு கட்டப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன.

நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

அதிகாலை 3 மணிக்கு பின்னர் மழை சற்று ஓய்ந்தது. இருப்பினும் தொடர்ந்து பலத்த காற்று வீசிக்கொண்டு இருந்தது. இதேபோல் மாவட்டத்தில் கடலோர பகுதியாக உள்ள பரங்கிப்பேட்டை கிள்ளை, டெல்டா பகுதியான சிதம்பரம் மற்றும் விருத்தாசலம், வேப்பூர் பகுதியிலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியது. மேலும் வாழை போன்ற தோட்டப் பயிர்களும் காற்றுக்கு ஈடு கொடுக்க முடியாமல் முறிந்து விழுந்து சேதமானது.

20.2 செ.மீ. மழை கொட்டியது

நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக கடலூரில் 28.2 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. அதாவது நேற்று முன்தினம் இரவு 10.30 மணி வரை 8 செ.மீட்டர் பெய்திருந்த நிலையில், அதன் பிறகு 9 மணி நேரத்தில் மட்டும் 20.2 செ.மீட்டர் மழை கொட்டியுள்ளது.

மாவட்டத்தில் பிற பகுதியில் பதிவான மழை அளவு விவரம் (சென்டி மீட்டரில்) வருமாறு:-

அதற்கு அடுத்த படியாக வானமாதேவியில் 19.2, பரங்கிப்பேட்டையில் 19, கொத்தவாச்சேரி 14, புவனகிரி 13.6 , குறிஞ்சிப்பாடி 13½, அண்ணாமலைநகர் 13.3, வடக்குத்து 13, சிதம்பரம் 12.7, சேத்தியாத்தோப்பு 11.2, பண்ருட்டி 10.6, குப்பநத்தம் 9.6, லால்பேட்டை 8.8, விருத்தாசலம், வேப்பூரில் தலா 8.3, காட்டுமயிலூர் 7.8, கீழ்செருவாய் 7.7., தொழுதூர், மே.மாத்தூரில் தலா 7.2., பெலாந்துறையில் 7 செ.மீ., ஸ்ரீமுஷ்ணம் 6.9, காட்டுமன்னார்கோவிலில் 6.3 மழையும் பதிவாகி இருந்தது. புயல் முன்னெச்சரிக்கையாக மாவட்டம் முழுவதும் 441 முகாம்கள் அமைக்கப்பட்டு, மொத்தம் 52 ஆயிரத்து 226 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பாதிப்புகள் என்பது குறைந்து காணப்பட்டது.

Next Story