கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக மழை உளுந்தூர்பேட்டையில் 12 சென்டி மீட்டர் பதிவு
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 12 சென்டி மீட்டர் மழை பதிவானது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் கிரண்குராலா ஆய்வு செய்தார்.
உளுந்தூர்பேட்டை,
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறியது. இதற்கு நிவர் என்று பெயரிடப்பட்டது. இந்த புயல் நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு வடக்கே கரையை கடந்து சென்றது. அப்போது பலத்த சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன. இடைவிடாது பெய்த அடை மழையால் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்டத்தின் தலைநகரான கள்ளக்குறிச்சியில் நேற்று முன்தினம் காலை முதல் மிதமான மழை பெய்தது. பின்னர் இரவில் மழையின் வேகம் அதிகரித்து விடிய விடிய கன மழையாக கொட்டித் தீர்த்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் வழிந்தோடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கியது.
சாலை துண்டிப்பு
அதேபோல் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களான ஆண்டிக்குழி, விஜயங்குப்பம், களத்தூர், மணலூர், கூட்டடி கள்ளக்குறிச்சி, கிழக்கு மருதூர் சோமாசி பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக 128 மில்லி மீட்டர் மழை பதிவானது.
இதனால் கூட்டடி கள்ளக்குறிச்சி, சோமாசிபாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி வழிந்ததால் அருகே உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் திருநாவலூர் ஒன்றியத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. இதேபோல நரியனோடை பகுதியிலுள்ள 100 மீட்டர் தரைப்பாலம் முழுவதும் நீரால் சூழ்ந்தது. இதன் காரணமாக சேந்தநாடு கூட்டடி கள்ளக்குறிச்சி வழியாக உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலம் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் கடலூர் மாவட்டம் பாலக்கொள்ளை, ஆலடி உள்ளிட்ட 20 கிராம மக்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருவதற்கு 10 கிலோமீட்டர் சுற்றி மாற்றுப்பாதையில் உளுந்தூர்பேட்டைக்கு வந்து சென்றனர்.
கலெக்டர் ஆய்வு
மழை சேதம் குறித்து ஆய்வு செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண் குரலா திருநாவலூர் ஒன்றியத்திற்கு வந்தார். அப்போது சேந்தநாடு கிராமத்தில் உள்ள முகாம்களில் தங்கி இருந்த பொதுமக்களிடம் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரப்பட்டுள்ளதா என கேட்டறிந்தார். பின்னர் விஜயங்குப்பம் மற்றும் களத்தூர் கிராமத்தில் மழைநீரால் சூழ்ந்துள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை அவர் பார்வையிட்டார்.
தொடர்ந்து அவர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது கோட்டாட்சியர் சாய் வர்தினி, தாசில்தார் காதர் அலி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன் செந்தில் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
திருக்கோவிலூர் பகுதியில்
திருக்கோவிலூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக அடை மழை பெய்தது. இதன் காரணமாக குளம் குட்டை மற்றும் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து காணப்படுவதால் அவை படிப்படியாக நிரம்பி வருகின்றன. திருக்கோவிலூர்-கள்ளக்குறிச்சி சாலையில் சந்தைப்பேட்டையில் சாலையோரமாக நின்ற புளியமரம் வேரோடு சாய்ந்தது.
தியாகதுருகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் சாலையோரங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதை காண முடிகிறது. தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மழை வெள்ளம் சூழ்ந்ததால் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதிப்படுவதால் தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது தவிர சங்கராபுரம், கண்டாச்சிமங்கலம், சின்னசேலம், ரிஷிவந்தியம் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து காணப்பட்டு அவை படிப்படியாக நிரம்பி வருகின்றன. சில இடங்களில் மழைநீர் விளைநிலங்களுக்குள் புகுந்ததால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருந்ததை காண முடிந்தது.
Related Tags :
Next Story