தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம் -கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது


தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம் -கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 28 Nov 2020 3:30 AM IST (Updated: 28 Nov 2020 12:00 AM IST)
t-max-icont-min-icon

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, தூத்துக்குடியில் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி, 

தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 43-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி அண்ணா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர இளைஞரணி துணை செயலாளர் செல்வின் வரவேற்று பேசினார். கீதாஜீவன் எம்.எல்.ஏ., ஜெகன் பெரியசாமி ஆகியோர் ‘கேக்‘ வெட்டி அனைவருக்கும் வழங்கினர். மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், இளைஞர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள், ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, சி.எஸ்.ராஜா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் ரவீந்தரன், சுரேஷ்குமார், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஜான்சீகன் முதியோர் இல்லத்திற்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, சி.எஸ்.ராஜா, மாநகர துணை செயலாளர் கீதா முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு ‘கேக்‘ வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.

தி.மு.க. மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் முத்து துரை, நற்பணி மன்ற மாவட்ட தலைவர் டி.பி.துரை, மாவட்ட செயலாளர் குமார், பொருளாளர் அண்டோ, துணை செயலாளர் கங்கா ராஜேஷ் மற்றும் சங்கர், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பாக அவரது பெயரில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கயத்தாறில் தி.மு.க.வினர் அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி இருக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவு மற்றும் துணிமணிகள் வழங்கினர். நிகழ்ச்சிக்கு கயத்தாறு ஒன்றிய செயலாளர் சின்னபாண்டியன் தலைமை தாங்கினார். கயத்தாறு நகர செயலாளர் சுரேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கருப்பசாமி பாண்டியன், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா புளியம்பட்டி புனித அந்தோணியார் கோவிலில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியம் சார்பில் புளியம்பட்டி புனித அந்தோணியார் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் மதிய உணவு, ஆடைகள், போர்வை போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளரும், பஞ்சாயத்து தலைவருமான இளையராஜா தலைமை தாங்கி பொருட்களை வழங்கினார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் அன்புராஜ், தங்கத்துரை பாண்டியன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நிக்கலஸ் அனிடன், நிர்வாகிகள் வேல்ராஜ், செல்வராஜ், ஹரிஹரன், மகாராஜன், செந்தில்குமார், அண்ணாவி முத்து, ராஜா, போஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓட்டப்பிடாரம் அருகே கே.கைலாசபுரம் ரோசாரி முதியோர் இல்லத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். சண்முகையா எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கினார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மாடசாமி, பஞ்சாயத்து தலைவர்கள் அருண்குமார், சதீஷ்குமார், பங்குதந்தை இருதயராஜ், ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பசுவந்தனை மெயின் பஜாரில் நடந்த விழாவுக்கு ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளரும், யூனியன் துணைத்தலைவருமான காசிவிஸ்வநாதன் தலைமை தாங்கி கட்சி கொடியேற்றி வைத்தார். பின்னர் ‘கேக்‘ வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராஜேஷ்வேல், கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் பார்த்தசாரதி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர் மாரியப்பன், ஒன்றிய நிர்வாகி முத்துராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆலோசனைப்படி, ஸ்ரீவைகுண்டத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் காவல்காடு சொர்ணகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Next Story