மகனை வெட்டிக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - நெல்லை கோர்ட்டு தீர்ப்பு


மகனை வெட்டிக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 28 Nov 2020 12:45 AM IST (Updated: 28 Nov 2020 1:31 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே சொத்து பிரச்சினையில் மகனை வெட்டிக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

நெல்லை, 

நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் குருநாதன், தொழிலாளி. இவருடைய மனைவி பிச்சையம்மாள். இவர்களுடைய மகன்கள் கண்ணன் மற்றும் கார்த்திகேயன் (வயது 37). இவர் திருமணாகி மனைவி வேணியுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கார்த்திகேயன், தன்னுடைய தந்தையிடம் சொத்துக்களை பிரித்து தருமாறு அடிக்கடி கேட்டு வந்தார். இதுதொடர்பாக தந்தை, மகன் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ந்தேதி குருநாதன், அவருடைய மகன் கண்ணன் ஆகியோர் வீட்டு வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த கார்த்திகேயன், தனக்கு சொத்துகளை பிரித்து தருமாறு கேட்டு தகராறு செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த குருநாதன், அரிவாளால் கார்த்திகேயனை வெட்டிக் கொலை செய்தார்.

இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குருநாதன், இவருடைய மனைவி பிச்சையம்மாள், மற்றொரு மகன் கண்ணன் ஆகியோரை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி ரவிசங்கர் வழக்கை விசாரித்து குருநாதனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். பிச்சையம்மாள், கண்ணன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.


Next Story