வீரசைவ-லிங்காயத் சமூகத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் அந்தஸ்து: எடியூரப்பாவின் முடிவுக்கு தடை போட்ட அமித்ஷா


வீரசைவ-லிங்காயத் சமூகத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் அந்தஸ்து: எடியூரப்பாவின் முடிவுக்கு தடை போட்ட அமித்ஷா
x
தினத்தந்தி 28 Nov 2020 4:30 AM IST (Updated: 28 Nov 2020 1:39 AM IST)
t-max-icont-min-icon

வீரசைவ-லிங்காயத் சமூகத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் அந்தஸ்து வழங்கும் விஷயத்தில் எடியூரப்பாவின் முடிவுக்கு அமித்ஷா தடை போட்டுள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் வீரசைவ-லிங்காயத் சமூகம், பெரும்பான்மை சமூகமாக திகழ்கிறது. மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் அந்த சமூகத்தினர் 17 சதவீதம் பேர் உள்ளனர். அந்த சமூகம் உயர் வகுப்பு பட்டியலில் உள்ளது. அந்த சமூகத்தை சேர்ந்த மக்கள், தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் அதே சமூகத்தை சேர்ந்த முதல்-மந்திரி எடியூரப்பா, வீரசைவ-லிங்காயத் சமூக மக்களின் மேம்பாட்டிற்காக ஒரு வாரியத்தை அமைத்துள்ளார்.

அதற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த நிலையில் வீரசைவ-லிங்காயத் சமூகத்தை சேர்ந்த பஞ்சமசாலி மடாதிபதி தலைமையிலான குழுவினர் முதல்-மந்திரி எடியூரப்பாவை நேரில் சந்தித்து, வீரசைவ-லிங்காயத் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 2, 3 நாட்களில் நல்ல செய்தியை அறிவிப்பதாக எடியூரப்பா அவர்களுக்கு உறுதியளித்தார்.

இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வீரசைவ-லிங்காயத் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க முடிவு எடுக்க எடியூரப்பா திட்டமிட்டு இருந்தார். இந்த தகவல் உள்துறை மந்திரி அமித்ஷாவின் கவனத்திற்கு சென்றது. உடனே அவர் எடியூரப்பாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, வீரசைவ-லிங்காயத் சமூகத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் அந்தஸ்து வழங்கும் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அமித்ஷா தடை போட்டதை அடுத்து எடியூரப்பா அந்த முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.

வட கர்நாடகத்தில் அதிகளவில் வசிக்கும் இந்த வீரசைவ-லிங்காயத் சமூகத்தினர், தேர்தல்களில் பா.ஜனதாவுக்கு ஆதரவான நிலையை எடுக்கக் கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story