சிறிய மாநிலங்களில் ஒட்டுமொத்த செயல்பாட்டில் சிறந்த மாநிலமாக புதுச்சேரிக்கு 2-வது இடம்
இந்தியாவிலேயே சிறிய மாநிலங்களில் ஒட்டுமொத்த செயல்பாட்டில் சிறந்த மாநிலமாக புதுச்சேரி 2-ம் இடத்தை பிடித்துள்ளது.
சென்னை,
உலகத்தை உலுக்கிவரும் கொரோனா பரவல் இந்தியா முழுவதுமே பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தை சுரண்டிவிட்டது.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, கொரோனாவால் ஏற்பட்ட மரண எண்ணிக்கை இந்தியாவில் குறைவுதான். ஆனால் ஜி.டி.பி. என்ற மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் நிலை கீழிறங்கிவிட்டது.
இதிலிருந்து மீண்டெழுவதற்கு பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த சவாலான சூழ்நிலையில் மாநில அரசுகளும் பொருளாதார வளர்ச்சிக்கு தங்களின் பங்களிப்பை கொடுக்கின்றன.
இந்த சூழ்நிலையில் மாநில அரசுகளின் செயல்பாடுகளை பற்றி இந்தியா டுடே இதழ் ஆய்வு மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த இதழ் கடந்த பல ஆண்டுகளாக இதுபோன்ற ஆய்வு முடிவுகளை வெளியிட்டு வருவது, பொருளாதார ரீதியில் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்தின் உள்கட்டமைப்பு, பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, சுகாதாரம், சட்டம்- ஒழுங்கு, சுற்றுச்சூழல், உள்ளடங்கிய மேம்பாடு, வேளாண்மை, கல்வி, நிர்வாகம், தொழில் சூழ்நிலை, வாழ்க்கைத்தரம் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
பரப்பளவு, மக்கள்தொகையின் அடிப்படையில் பெரிய மற்றும் சிறிய மாநிலங்களாக பிரித்து இந்தியா டுடே ஆய்வு மேற்கொள்கிறது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பெரிய மாநிலங்களில் ஒட்டுமொத்த செயல்பாட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்த மாநிலமாக மீண்டும் முதலிடம் பெற்றுள்ளது. தமிழகம் முதலிடம் பிடிப்பது, தொடர்ந்து 3-வது முறையாகும்.
கடந்த 2018, 2019-ம் ஆண்டுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றிருந்த தமிழகம், இந்த ஆண்டு 2 ஆயிரம் மொத்த மதிப்பெண்ணுக்கு 1,263.1 மதிப்பெண்கள் பெற்று மீண்டும் முதலிடத்தை அடைந்து பெருமை கண்டுள்ளது.
தமிழகத்துக்கு அடுத்தபடியாக 2-ம், 3-ம், 4-ம், 5-ம் இடங்களை முறையே இமாசலபிரதேசம், பஞ்சாப், கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன. தென்மாநிலங்களான ஆந்திரா 7-ம் இடத்தையும், தெலுங்கானா 9-ம் இடத்தையும், கர்நாடகா 11-ம் இடத்தையும் பெற்றுள்ளன.
சிறிய மாநிலங்களில் ஒட்டுமொத்த செயல்பாட்டில் 1,267.5 மதிப்பெண்கள் பெற்று கோவா இரண்டாம் முறையாக முதலிடம் பிடித்துள்ளது. 2018-ம் ஆண்டில் 2-ம் இடத்தையும், 2019-ம் ஆண்டில் முதலிடத்தையும் கோவா பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
கோவாவுக்கு அடுத்தபடியாக புதுச்சேரி 1,249.1 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும், 1,202.7 மதிப்பெண்கள் பெற்று தலைநகர் டெல்லி 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன.
பெரிய மாநிலங்கள் வரிசையில், கொரோனா தடுப்பு மேலாண்மையில் மொத்த மதிப்பெண் 100-க்கு 66.2 மதிப்பெண்கள் பெற்று தமிழகம் 2-ம் இடத்தை பிடித்துள்ளது. இதில் 74.2 மதிப்பெண்கள் பெற்ற அசாம் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்திருக்கிறது.
இப்பிரிவில், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய தென்மாநிலங்கள் முறையே 3, 8, 10, 12 ஆகிய இடங்களை பெற்றுள்ளன.
சிறிய மாநிலங்களில் கொரோனா தடுப்பு மேலாண்மையில் 71.2 மதிப்பெண்கள் பெற்று அருணாசலபிரதேசம் முதலிடத்தை பிடித்துள்ளது. 55 மதிப்பெண்கள் பெற்றுள்ள புதுச்சேரி 5-ம் இடத்தில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story