நிவர் புயல் வெள்ள சேத மீட்பு பணிகளுக்குப் பின் புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது பஸ்கள் ஓடத் தொடங்கின


நிவர் புயல் வெள்ள சேத மீட்பு பணிகளுக்குப் பின் புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது பஸ்கள் ஓடத் தொடங்கின
x
தினத்தந்தி 28 Nov 2020 4:48 AM IST (Updated: 28 Nov 2020 4:48 AM IST)
t-max-icont-min-icon

நிவர் புயல் மழையால் வெள்ள பாதிப்புக்குள்ளான புதுச்சேரியில் மீட்பு பணிகளுக்குப் பின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. பஸ்கள் ஓடத்தொடங்கின. கடைகள், ஓட்டல்கள் வழக்கம் போல் இயங்கின.

புதுச்சேரி, 

நிவர் புயல் புதுச்சேரி அருகே கடந்த 25-ந்தேதி நள்ளிரவில் கரையை கடந்ததையொட்டி சூறாவளி காற்றுடன் விடிய விடிய பலத்த மழை பெய்தது. ஏற்கனவே பெய்து இருந்த நிலையில் இந்த மழையும் சேர்ந்து கொண்டதால் நகர் மற்றும் கிராமப்புறங்களில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் வெங்கட்டாநகர், கிருஷ்ணாநகர், ரெயின்போ நகர், விடுதலைநகர், புஸ்சி வீதி, லெனின் வீதி, இந்திராகாந்தி சிலை, தட்டாஞ்சாவடி உள்பட பல இடங்களில் 5 ஆயிரம் வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

இதையடுத்து பேரிடர் மேலாண்மை குழுவினருடன் சேர்ந்து பொதுப்பணி, நகராட்சி, காவல், தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். வெள்ளத்தில் சிக்கி வீடுகளை விட்டு வெளியே வர முடியாதவர்களை மீட்பு படையினர் பாதுகாப்பாக மீட்டு வந்து நிவாரண மையங்களில் தங்க வைத்தனர். அரசு சார்பில் அவர்களுக்கு குடிநீர், உணவு வழங்கப்பட்டது.

சாய்ந்து விழுந்த மரங்கள் உடனுக்குடன் துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன. தாழ்வான பகுதியில் குளம் போல் தேங்கிய தண்ணீர் ராட்சத மோட்டார்கள் மூலம் இரவு, பகலாக வெளியேற்றப்பட்டது. இதனால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வடிந்த நிலையில் இயல்பு நிலைக்கு புதுவை திரும்பி வருகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் லேசாக தண்ணீர் தேங்கியுள்ளது.

புயல் முன்னெச்சரிக்கையாக பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நேற்று முன்தினம் பகல் 12 மணி முதல் விலக்கி கொள்ளப்பட்டதையடுத்து கடந்த 2 நாட்களாக இயங்காமல் இருந்த ஓட்டல்கள், கடைகள், தனியார் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் வழக்கம் போல் நேற்று திறக்கப்பட்டு செயல்பட்டன. ஓடாமல் இருந்த அரசு மற்றும் தனியார் பஸ்களும் ஓடத்தொடங்கின. ஆட்டோ, டெம்போக்களும் இயங்கின. வெளி மாநில வாகனங்களும் புதுச்சேரிக்கு வந்து சென்றன.

வீடுகளில் முடங்கிக் கிடந்த பொதுமக்கள் வழக்கமான வேலைகளை தொடங்கினர். கடும் பதற்றத்தில் இருந்த மீனவ பகுதியும் சகஜ நிலைக்கு திரும்பியது. மீனவர்களில் பலர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். ஒரு சிலர் மட்டுமே கடலுக்கு செல்வதை தவிர்த்தனர்.

பல இடங்களில் வெள்ளம் வடிந்த நிலையில் பாதுகாப்பு மையங்களில் தங்கி இருந்தவர்கள் முகாம்களை காலி செய்து கொண்டு தங்களது வீடுகளுக்கு திரும்பத் தொடங்கி உள்ளனர். அங்கு தங்கி இருந்து வரும் மற்றவர்களுக்கு அரசு தரப்பில் இருந்து குடிநீர், உணவு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்ந்து செய்து தரப்பட்டு வருகின்றன.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தநிலையில் மின்துறையினர் துரிதமாக செயல்பட்டு பகுதி பகுதியாக மாநிலம் முழுவதும் மின் வினியோகத்தை சீரமைத்தனர். நிவர் புயலால் பலத்த மழை பெய்ததையொட்டி ஒரே நாளில் 30 செ.மீ. மழை பதிவானது. இதனால் புதுச்சேரியில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சித்தேரி, கொமந்தான்மேடு தடுப்பணைகளும் நிரம்பியதால் அங்கு இளைஞர்கள் பலர் குளிப்பதற்கு ஆர்வம் காட்டினர். ஆனால் அரசு தடை விதித்து இருப்பதையொட்டி அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

புயலால் புதுவையில் சுமார் ரூ.400 கோடிக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். அதே நேரத்தில் சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அதன் விவரங்களை தெரிவிக்குமாறு அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி பொதுப்பணி, வேளாண், மின்சாரம், உள்ளாட்சி, கால்நடை, வருவாய் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் தங்கள் கிராமம், நகர புறங்களில் சேத குறித்து தீவிரமாக கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். ஓரிரு நாளில் இந்த பணிகளை முடித்துக் கொண்டு அரசுக்கு அவர்கள் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். அதன்பின் புயல் சேத விவரங்களை ஒருங்கிணைத்து கோப்பு அனுப்பி வைத்து மத்திய அரசிடம் நிதி கேட்க திட்டமிடப்பட்டுள்ளது.

Next Story