நண்பர்களுடன் மீன் பிடித்து விளையாடிய போது விபரீதம்: கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து சிறுவன் பலி


நண்பர்களுடன் மீன் பிடித்து விளையாடிய போது விபரீதம்: கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து சிறுவன் பலி
x
தினத்தந்தி 28 Nov 2020 12:20 AM GMT (Updated: 28 Nov 2020 12:20 AM GMT)

கொடுங்கையூர் அருகே நண்பர்களுடன் சேர்ந்து மீன் பிடித்து விளையாடி கொண்டிருந்த போது, கழிவு நீர் கால்வாய்க்குள் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக பலியானான்.

பெரம்பூர், 

கொடுங்கையூர் அடுத்த சின்னண்டிமடம் பகுதியில் திறந்த வெளி ராட்சத கழிவுநீர் கால்வாய் உள்ளது. கடந்த சில நாட்களாக வெளுத்து கட்டிய மழையால் இந்த கழிவுநீர் கால்வாயில் மழை நீர் நிரம்பி ஓடுகிறது. இதில் சிறுவர்கள் தூண்டிலில் மீன் பிடித்து விளையாடி வருகின்றனர்.

இதற்கிடயே அதே பகுதியை சேர்ந்த லோகேஷ், கோமதி தம்பதியருக்கு 2 மகன்கள் உண்டு. கோமதியின் கணவர் லோகேஷ் இறந்துவிட்ட நிலையில், அவரது மூத்த மகன் முகேஷ் (வயது 9) அவனது பாட்டி வீட்டில் தங்கி அரசு பள்ளியில் 5-வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று மதியம் சிறுவர்களுடன் சேர்ந்து முகேஷ் மீன் பிடித்து விளையாடிக்கொண்டு இருந்தபோது, திடீரென கால்வாய் தண்ணீருக்குள் தவறி விழுந்தான். இதனால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவனை சக நண்பர்கள் மீட்க முடியாத நிலையில் கூச்சலிட்டனர். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் வியாசர்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து, 2 ரப்பர் படகு மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

2 மணி நேரத்துக்கும் மேலாக தேடியும் கிடைக்காத நிலையில் பெரம்பூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஆர்.டி. சேகர் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதி நீச்சல் தெரிந்த வாலிபர்களை 5 பேரை தேடுதல் பணியில் ஈடுபடுத்தினார்.

அப்போது சுமார் 300 அடி தூரத்தில் தண்ணீரில் மயங்கி கிடந்த சிறுவனை அவர்கள் மீட்டனர். மீட்கப்பட்ட சிறுவனை கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் உள்ளிட்ட போலீசார் போலீஸ் வாகனம் மூலம், சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக் டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் கால்வாயில் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story