தஞ்சையில் பரபரப்பு: 10¼ கிலோ கஞ்சாவுடன் ரவுடி கைது - விடுவிக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் மனைவி தற்கொலைக்கு முயற்சி


தஞ்சையில் பரபரப்பு: 10¼ கிலோ கஞ்சாவுடன் ரவுடி கைது - விடுவிக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் மனைவி தற்கொலைக்கு முயற்சி
x
தினத்தந்தி 28 Nov 2020 3:45 AM IST (Updated: 28 Nov 2020 6:13 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் 10¼ கிலோ கஞ்சாவுடன் ரவுடியை போலீசார் கைது செய்தனர். கணவரை விடுவிக்கக்கோரி 2 குழந்தைகளுடன் போலீஸ் நிலையத்திற்கு வந்த பெண் அங்கு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனையை தடுத்து நிறுத்தவும், மீறி விற்பனை செய்பவர்களை கைது செய்யவும் போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் தஞ்சையை அடுத்த கூடலூர் பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்து சிலர் விற்பனை செய்து வருவதாக தஞ்சை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு போலீசார் வருவதை பார்த்தவுடன் ஒரு வாலிபர் தப்பி ஓடினார். அவரை போலீசார் விரட்டி சென்றனர். போலீசாரிடம் பிடிபடக்கூடாது என்பதற்காக வேகமாக ஓடிய அந்த வாலிபர், கழிவுநீரில் தவறி விழுந்தார். அப்போது அவரை பிடிக்க சென்ற போலீசாரை அவர் தள்ளிவிட்டு ஓட முயன்றபோது அந்த வாலிபரும், போலீசாரும் கட்டிப்புரண்டனர். இறுதியில் அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், தஞ்சையை அடுத்த கூடலூர் சின்னதெருவை சேர்ந்த ஜெயக்குமார்(வயது 36) என்பதும், அவர் விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி வைத்து இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரது வீட்டின் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10¼ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்து தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் ஜெயக்குமாரின் உறவினர்கள் தாலுகா போலீஸ் நிலைய வளாகத்தில் திரண்டனர். அப்போது ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் அவரது மனைவி வெண்ணிலா(34) தனது 2 குழந்தைகளுடன் தாலுகா போலீஸ் நிலையத்தில் திடீரென போராட்டம் நடத்தினார்.

இதை பார்த்த போலீசார் அவரை அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் வெண்ணிலா, தனது கணவரை விடுதலை செய்யவில்லை என்றால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என கூறி தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் கேனை திறந்து அதில் இருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், வெண்ணிலாவிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பிடுங்கி பறிமுதல் செய்ததுடன், அவர் மீது தண்ணீரை ஊற்றினர். தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள தாலுகா போலீஸ் நிலைய பகுதி, தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிக்குள் வருவதால் நடந்த சம்பவம் குறித்து கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், தாலுகா போலீஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் வெண்ணிலாவை, தாலுகா போலீசார் ஒப்படைத்தனர்.

பின்னர் வெண்ணிலாவை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட், தற்கொலைக்கு முயற்சி செய்ததாக வெண்ணிலா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். பின்னர் அவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கஞ்சாவுடன் கைதான ஜெயக்குமார் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடிகள் பட்டியலில் அவர் பெயர் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story