திருச்சியில் பரபரப்பு: கோவிலுக்குள் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


திருச்சியில் பரபரப்பு: கோவிலுக்குள் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 28 Nov 2020 3:30 AM IST (Updated: 28 Nov 2020 8:30 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் உள்ள சங்கிலி ஆண்டவர் கோவிலுக்குள் மும்பை வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

மலைக்கோட்டை,

மும்பை அருகே உள்ள தானே மாவட்டம் பயந்தர்வெஸ்ட் உத்தன் ரோடு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மணிகண்டனின் மனைவி அழகு (வயது 51). இவர்களது மகன் ராதாகிருஷ்ணன் (18). உறவினர் ஒருவர் வீட்டு திருமணத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாயார் அழகுடன் திருச்சிக்கு வந்து, இ.பி.ரோடு சத்தியமூர்த்தி நகரில் உள்ள தனது சித்தப்பா வீட்டில், ராதாகிருஷ்ணன் தங்கி இருந்தார்.

ராதாகிருஷ்ணன் செல்போனில் கேம் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக செல்போனில் அதிக அளவில் கேம் விளையாடிக் கொண்டிருக்கும்போது அதிக நேரம் தோற்றுபோனதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ராதாகிருஷ்ணன் மன விரக்தியுடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் சோகமாக இருந்த அவர் நேற்று அதிகாலை வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் அதே பகுதியில் உள்ள பில்லுக்கார தெருவில் உள்ள சங்கிலி ஆண்டவர் கோவிலுக்கு சென்று அங்கு உள்ள மண்டபத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் ராதாகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சியில் நேற்று அதிகாலையில் கோவிலுக்குள் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story