கரூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - காணொலிக்காட்சி மூலம் கலெக்டர் குறைகளை கேட்டறிந்தார்


கரூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - காணொலிக்காட்சி மூலம் கலெக்டர் குறைகளை கேட்டறிந்தார்
x
தினத்தந்தி 28 Nov 2020 3:30 AM IST (Updated: 28 Nov 2020 9:05 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காணொலிக்காட்சி மூலம் கலெக்டர் குறைகளை கேட்டறிந்தார்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமையில் காணொலிக்காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தின் 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குனர்கள் அலுவலகத்தில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் காணொலிக்காட்சி வாயிலாக கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அலுவலர்கள் தங்கள் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

அதனைத்தொடர்ந்து வட்டார விரிவாக்க மையங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர். மண்புழு உரங்கள் பரவலாக கிடைக்கும் வகையில் நடவடிக்கை தேவை என்றும், டிசம்பர் மாதம் இறுதிக்குள் நெல்கொள்முதல் நிலையங்கள் அமைத்திட வழிவகை செய்திட வேண்டும் என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அனைவரது கோரிக்கைகளையும், காணொலிக்காட்சி மூலம் கேட்டறிந்த கலெக்டர் மலர்விழி, கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். உங்களின் கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விவசாயிகளின் கோரிக்கைக்கு எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஒருவார காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் குளித்தலை சப்-கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான், வேளாண்மை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் காந்திநாதன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமாபதி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மணிமேகலை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story