சங்கரன்பாடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் தேக்கம், கொள்முதல் செய்வதில் அதிகாரிகள் அலட்சியம் - விவசாயிகள் வேதனை


சங்கரன்பாடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் தேக்கம், கொள்முதல் செய்வதில் அதிகாரிகள் அலட்சியம் - விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 28 Nov 2020 10:15 AM IST (Updated: 28 Nov 2020 10:55 AM IST)
t-max-icont-min-icon

ஓச்சேரி அருகே சங்கரன்பாடியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. நெல் கொள்முதல் செய்வதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

காவேரிப்பாக்கம்,

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியை அடுத்த சங்கரன்பாடி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அங்கு, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த களத்தூர், சித்தஞ்சி, பெரும்புலிப்பாக்கம் மற்றும் சங்கரன்பாடி, கிளார், பெரும்பாக்கம், முசரவாக்கம் உள்பட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களின் நிலத்தில் பயிரிடும் நெற்கதிர்களை அறுவடை செய்து, சங்கரன்பாடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு நெல்மணிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். அந்தக் கொள்முதல் நிலையத்தில் 4 மாதத்துக்கு ஒரு முறை நெல் கொள்முதல் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.

இந்தநிலையில் நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் நெல் கொள்முதல் கடைசி நாள் கடந்த 23-ந்தேதியுடன் முடிவடைந்தாக கூறப்படுகிறது. இதனால் தற்போது அறுவடை செய்துள்ள சுமார் 43 விவசாயிகள் கொண்டு வந்த நெல், கொள்முதல் நிலையம் முன்பு ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், அரசு அதிகாரிகள் நெல் கொள்முதல் செய்ய வேண்டிய காலம் முடிந்து விட்டது. தற்போது நீங்கள் கொண்டு வந்துள்ள நெல்லை கொள்முதல் செய்ய முடியாது. நாங்கள் ஏற்கனவே கொள்முதல் செய்யபட்ட நெல் மூட்டைகளை இன்னும் காலி செய்யவில்லை, எனவே நீங்கள் கொண்டு வந்த நெல்லை எடுக்க இயலாது எனக் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், இதுபற்றி ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் கடன் வாங்கி விவசாயம் செய்தால், நெல்லை வாங்க அரசு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து வருகிறார்கள். நெல் கொள்முதல் செய்ய அலட்சியம் காட்டுகிறார்கள். இது, விவசாயிகள் மத்தியில் பெரும் வேதனையாக உள்ளது. நிவர் புயலுக்கு முன்பே கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகள் கொண்டு வந்த சுமார் 4,500 நெல் மூட்டைகள், போதிய பாதுகாப்பின்றி மழையில் நனைந்துள்ளது. இதனால் 43 விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

எனவே விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நெல் கொள்முதல் செய்யும் நாட்களை நீட்டிக்க வேண்டும். தற்போது கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்து, தேக்கம் அடைந்துள்ள நெல்லை அரசு அதிகாரிகள் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், எனக் கோரிக்கை விடுத்தனர்.


Next Story