மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா


மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 28 Nov 2020 12:30 PM IST (Updated: 28 Nov 2020 12:23 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

விருதுநகர் ,

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 11 ஆயிரத்து 666 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 15,840 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. 15,549 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 2,540 பேரின் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.

66 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் நேற்று 15 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 15,855 ஆக உயர்ந்துள்ளது.

வழக்கம்போல் மாவட்ட சுகாதாரத்துறை முழுமையான பட்டியலை வெளியிடவில்லை. அரசு அறிவித்த படி மருத்துவ பரிசோதனை எண்ணிக்கையையும் அதிகரிக்கவில்லை. நேற்று 1,446 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உள்ள நிலையில் 2,500-க்கும் மேற்பட்டோரின் முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.

நேற்று முன்தினம் 22 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு ஏற்பட்ட 22 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்களா அல்லது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்களா என்பது தெரியவில்லை. ஏனெனில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளோரின் எண்ணிக்கையும் முறையாக அறிவிக்கப்படவில்லை.

தொடர்ந்து மாவட்ட சுகாதாரத்துறையினர் பட்டியலுக்கும், மாநில பட்டியலுக்கும் முரண்பாடு தான் இருக்கிறது. இதற்கான காரணமும் தெரியவில்லை.

உள்ளாட்சி அமைப்புகளும், நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை படிப்படியாக குறைந்து விட்ட நிலையில் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. முதல்-அமைச்சர் வந்து சென்ற பின்னர் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளிலும், மருத்துவ பரிசோதனை செய்வதிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வேகம் குறைந்து காணப்படுகிறது. இதனை முடுக்கிவிட வேண்டிய பொறுப்பினை மாவட்ட நிர்வாகமும் மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் ராஜபாளையத்தில் தென்றல்நகர், கிருஷ்ணபுரம் வடக்கு தெரு, சாத்தூர் தாலுகாவில் படந்தால் ஆகிய 3 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் மலைப்பட்டி கிராமம் மட்டுமே கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 3 பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நோய் பரவல் அதிகரித்து உள்ளது என்பது உறுதியாகிறது. எனவே மாவட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Next Story