பட்டியலில் பெயர் உள்ளதா? என்று சரிபார்க்க கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் உதவி மையம்
வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என்று சரிபார்க்கவும், சந்தேகங்களை கேட்டு அறியவும் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் உதவி மையம் செயல்பட்டு வருகிறது.
ஊட்டி,
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி கடந்த 16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்தல், முகவரி மாற்றம் செய்ய வருகிற டிசம்பர் மாதம் 15-ந் தேதி வரை சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடந்து வருகின்றது. 1.1.2021-ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்பதை சரிபார்க்க 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். தங்களது பெயர் எந்த சட்டமன்ற தொகுதியில் உள்ளது, சம்பந்தப்பட்ட வாக்காளர் ஓட்டு போடும் வாக்குச்சாவடி என்ன என்பது குறித்து அறியலாம். மேலும் வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் சம்பந்தமான சந்தேகங்களை கேட்கலாம். உதவி மையத்தில் சுழற்சி முறையில் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை 50 அழைப்புகள் வந்து உள்ளன.
திருத்தம், முகவரி மாற்றம் செய்ய எந்த படிவங்களில் ஆதாரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்று விளக்கப்படுகிறது. உதவி மையம் மட்டுமின்றி www.nvsp.in, http://eci.gov.in என்ற இணையதள முகவரியில் வாக்காளர்கள் தங்களது பெயர், புகைப்படம், முகவரி போன்றவை சரியாக இடம் பெற்று உள்ளதா என்று சரிபார்க்கலாம். திருத்தம், முகவரி மாற்றம் செய்ய வேண்டியதற்கான படிவங்களை பதிவிறக்கம் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். புதியதாக பெயர் சேர்ப்பவர்கள் வயது சான்றாக பிறப்பு சான்று, பள்ளி மாற்றுச்சான்று, மதிப்பெண் சான்று ஆகியவற்றில் ஏதேனும் ஒரு நகல், முகவரி சான்றுக்காக ஆதார் அடையாள அட்டை, ஸ்மார்ட் கார்டு, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதியான வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்க படக்கூடாது. இதை கருத்தில் கொண்டு சிறப்பு முகாம் கடந்த வாரம் நடந்தது. இதில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க போன்றவற்றுக்கு ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்க கடைசி நாள் டிசம்பர் 15-ந் தேதி ஆகும். வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி திருத்தங்களை மேற்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story