மலிவு விலை பொருட்கள் வழங்காததை கண்டித்து விழுப்புரத்தில் படைவீரர்களின் குடும்பத்தினர் சாலை மறியல்


மலிவு விலை பொருட்கள் வழங்காததை கண்டித்து விழுப்புரத்தில் படைவீரர்களின் குடும்பத்தினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 28 Nov 2020 1:00 PM IST (Updated: 28 Nov 2020 12:49 PM IST)
t-max-icont-min-icon

மலிவு விலை பொருட்கள் வழங்காததை கண்டித்து விழுப்புரத்தில் படைவீரர்களின் குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினர்களுக்கு மளிகை பொருட்கள், சோப்பு வகைகள், நறுமண பொருட்கள், டி.வி., மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ், வாஷிங்மெஷின், குளிரூட்டும் பெட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மதுபான வகைகளையும் மலிவு விலையில் வழங்குவதற்காக விழுப்புரம் காகுப்பம் சாலையில் மலிவு விலை அங்காடி இயங்கி வருகிறது.

இந்த அங்காடியில் வாரந்தோறும் செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி ஆகிய 4 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையும், புதன்கிழமை மட்டும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் படைவீரர்கள், முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினர்களுக்கு மலிவு விலை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நிவர் புயல் காரணமாக கடந்த 24, 25-ந் தேதிகளில் அரசு பொது விடுமுறை அறிவிப்பினால் அங்காடி திறக்கப்படவில்லை. நேற்று முன்தினமும் பொருட்கள் வழங்கப்படாத நிலையில் நேற்று பொருட்களை வாங்குவதற்காக படைவீரர்கள், முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் அந்த அங்காடிக்கு சென்றனர். ஆனால் அவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படவில்லை.

இதுபற்றி அங்கிருந்த அதிகாரிகளிடம் காரணம் கேட்டதற்கு மாதத்தில் 2 நாட்கள் வழக்கம்போல் பொருட்களின் இருப்பு விவரத்தை ஆய்வு செய்வதற்காக விடுமுறை விடப்படுவதுபோல் 27, 28-ந் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது, எனவே அடுத்த மாதம் வந்து பொருட்களை வாங்கிக்கொள்ளும்படி அங்கிருந்த அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனை ஏற்க மறுத்த படைவீரர்களின் குடும்பத்தினர், இந்த மாதத்திற்குரிய பொருட்களையே நாங்கள் இன்னும் வாங்காதபட்சத்தில் அந்த பொருட்களை எங்களுக்கு எப்போது வழங்குவீர்கள் என்று அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்குள்ள அதிகாரிகள், அங்காடிக்கு வெளியே 27, 28-ந் தேதி விடுமுறை என்று அறிவிப்பு நோட்டீசு ஒட்டினர்.

இதனால் ஆத்திரமடைந்த படைவீரர்களின் குடும்பத்தினர் பகல் 12.15 மணியளவில் அங்குள்ள மெயின்ரோட்டுக்கு திரண்டு சென்று ரெட்டியார் மில் பஸ் நிறுத்தம் அருகில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மலிவு விலை பொருட்கள் வழங்காததை கண்டித்தும், பொருட்களை உடனடியாக வழங்கக்கோரியும் அவர்கள் கோஷம் எழுப்பினர். இந்த மறியல் காரணமாக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேதுராமன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்காடி மேலாளரிடம் பேசி பொருட்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்ற அவர்கள் அனைவரும் பகல் 12.30 மணிக்கு மறியலை கைவிட்டனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.அதனை தொடர்ந்து அவர்களுக்கு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

Next Story