திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் ஏ.டி.எம். என்ஜினீயர் வீட்டில் 35 பவுன் நகைகள் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் ஏ.டி.எம். என்ஜினீயர் வீட்டில் புகுந்து 35 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வானூர்,
வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு குருதட்சிணாமூர்த்தி நகரை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 40). ஏ.டி.எம். என்ஜினீயர். மனைவி, மகன் மற்றும் பெற்றோருடன் தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். அவர்கள் ஒரு அறையில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த தங்க சங்கிலி, மோதிரம், கம்மல், மூக்குத்தி உள்ளிட்ட நகைகளை கொள்ளையடித்தனர்.
சசிகுமாரின் தந்தை சம்பத் வெளியூர் சென்று இருந்த நிலையில் ஹாலில் தனியாக படுத்து இருந்த தாயார் லலிதாவின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை மர்ம நபர்களில் ஒருவர் பறித்தார். அப்போது திடுக்கிட்டு எழுந்த லலிதா விபரீதத்தை புரிந்து கொண்டு சங்கிலியை பறிக்க விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டு கூச்சல் போட்டார்.
சத்தம் கேட்டு மற்றொரு அறையில் படுத்து இருந்த சசிகுமாரும், அவரது மனைவியும் திடுக்கிட்டு எழுந்து ஓடி வந்து மர்ம ஆசாமியை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அறுந்து போன சங்கிலியுடன் அந்த ஆசாமி தப்பி ஓடிவிட்டார். அவருடன் வந்த மற்ற கொள்ளையரும் தப்பிச் சென்றனர்.
இந்த போராட்டத்தின் போது லலிதாவின் கையில் அரை பவுன் சங்கிலி மட்டுமே தப்பியது. கொள்ளை ஆசாமி கையில் சிக்கியது 5 பவுன் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் லலிதாவின் கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது.
மொத்தத்தில் சசிகுமாரின் வீட்டில் இருந்து 35 பவுன் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.15 லட்சம் என்று கூறப்படுகிறது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஆரோவில் போலீசில் சசிக்குமார் புகார் செய்தார். அதன்பேரில் கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம், ஆரோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர் சோமசுந்தரம் தலைமையிலான குழுவினர் வந்து தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் சம்பவ இடத்தில் இருந்து திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு வரையும், பின்னர் அருகில் உள்ள வானூர் கோர்ட்டு வரையும் சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
கொள்ளை நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பகுதியில் கடந்த சில மாதங்களாக காலி மனை, தோட்டம் உள்ள வீடுகளை குறிவைத்து பின்பக்க கதவை உடைத்து 5-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரேமாதிரியாக கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதால் ஒரே கும்பல் தான் இந்த கைவரிசையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள்.
Related Tags :
Next Story