தூத்துக்குடி அருகே ரூ.590 கோடி போதைப்பொருள் கடத்தல்: கைதான 6 பேரும் சென்னை கொண்டு செல்லப்பட்டனர்


தூத்துக்குடி அருகே ரூ.590 கோடி போதைப்பொருள் கடத்தல்: கைதான 6 பேரும் சென்னை கொண்டு செல்லப்பட்டனர்
x
தினத்தந்தி 28 Nov 2020 10:30 PM GMT (Updated: 28 Nov 2020 5:22 PM GMT)

தூத்துக்குடி அருகே கடலில் ரூ.590 கோடி போதைப்பொருள் கடத்தியது தொடர்பாக கைதான 6 பேரும் சென்னை புழல் சிறையில் அடைப்பதற்காக நேற்று கொண்டு செல்லப்பட்டனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் வந்த இலங்கையை சேர்ந்த படகை கடலோர காவல்படையினர் ரோந்து கப்பல் வைபவில் சென்று மடக்கி பிடித்தனர்.

அந்த படகில் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு செல்வதற்காக 100 கிலோ ஹெராயின், 20 சிறிய பெட்டிகளில் இருந்த கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன் மற்றும் 5 நவீன கைத்துப்பாக்கிகள், சேட்டிலைட் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு ரூ.590 கோடி ஆகும்.

இதைத்தொடர்ந்து படகில் இருந்த இலங்கை நீர்க்கொழும்பு பகுதியைச் சேர்ந்த நீந்துகுல சூர்ய சந்தமனுவேல் (வயது 50), வர்னகுலசூர்யஜீவன் (29), லட்சுமணன் குமார் (37), வர்ணகுலசாந்தசுனிமான் (25), சமீரா (32), நிஷாந்த் கமகயே (46) ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக மதுரை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து 6 பேரிடம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தென்மண்டல இயக்குனர் புருனே தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகளின் பணத்தேவையை பூர்த்தி செய்வதற்காக இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் நடத்தப்படுகிறதா? அவர்கள் எந்தெந்த வழித்தடங்களில் கடத்தலை மேற்கொண்டு வருகின்றனர்? அவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பன போன்ற விவரங்களையும் சேகரித்து உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் கைதான 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக தேசிய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அழைத்து வந்தனர். 6 பேருக்கும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள் தூத்துக்குடி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு உமாதேவி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 4-ந் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து 6 பேரும் பேரூரணியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணி அளவில் 6 பேரும் பலத்த பாதுகாப்புடன் சென்னை புழல் சிறையில் அடைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டனர்.

Next Story