தூத்துக்குடியில் அழகிய சுவர் ஓவியங்களால் புதுப்பொலிவு பெற்ற மாநகராட்சி பள்ளி - பொதுமக்களின் கண்களுக்கு விருந்து படைக்கின்றன


தூத்துக்குடியில் அழகிய சுவர் ஓவியங்களால் புதுப்பொலிவு பெற்ற மாநகராட்சி பள்ளி - பொதுமக்களின் கண்களுக்கு விருந்து படைக்கின்றன
x
தினத்தந்தி 29 Nov 2020 4:00 AM IST (Updated: 28 Nov 2020 11:25 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் அழகிய சுவர் ஓவியங்களால் மாநகராட்சி பள்ளி புதுப்பொலிவு பெற்று உள்ளது. அந்த ஓவியங்கள் அனைத்தும் பொதுமக்களின் கண்களுக்கு விருந்து படைக்கின்றன.

தூத்துக்குடி, 

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபாதை விரிவுபடுத்துதல், முக்கிய போக்குவரத்து வழித்தடங்களில் சாலையின் தரத்தை மேம்படுத்துதல், பூங்காக்கள், அறிவியல் மையம், இணைய வசதியுடன் கூடிய பொழுதுபோக்கு தளங்கள், விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள் வரைதல் போன்ற பணிகளும் நடந்து வருகின்றன.

அதன்படி மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு வருவது பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து உள்ளது. தத்ரூபமாக வரையப்பட்டுள்ள ஓவியங்கள் பார்ப்போரின் கண்ணுக்கு விருந்து அளிப்பதாக உள்ளது.

லெவிஞ்சிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் சுவர்களிலும் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. தூய்மை பாரத இயக்கத்தின் குறிக்கோள்களை உணர்த்தும் வகையில் பள்ளியின் சுவரில், கழிப்பறையை பயன்படுத்துதல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது, குப்பையை தரம் பிரித்து வழங்குவது, மறுசுழற்சி செய்யத்தக்க பொருட்களை பயன்படுத்துதல், பிளாஸ்டிக் தவிர்ப்பு, நெகிழி இல்லா சமுதாயம் அமைத்தல், அகத்தூய்மை, புறத்தூய்மை உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை வலியுறுத்தி ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.

மேலும் பள்ளி சூழல் குழந்தைகளை ஈர்க்கும் வகையில் கார்ட்டூன் சித்திரங்களும் பள்ளியில் சுவரில் அழகாக காட்சி தருகின்றன. தமிழகத்தின் பிரதான தொழிலான விவசாயத்தை போற்றும் வகையில் ஏர்உழவு செய்தல், இயற்கை பேணல் உள்பட பல்வேறு அம்சங்களை வலியுறுத்தியும் ஓவியங்கள் தீட்டப்பட்டு இருக்கின்றன. இந்த அழகிய சுவர் ஓவியங்களால் மாநகராட்சி பள்ளி புதுப்பொலிவு பெற்று உள்ளது.

இதேபோன்று குரூஸ்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வெளிப்புற சுவரில் புதுமை ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. இந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருத்தை வலியுறுத்தும் விதமாக சித்தரிக்கப்பட்டு உள்ளது.

இயற்கையை பாதுகாக்க வேண்டும், இயற்கை வளங்களை பேணவேண்டும் என்பதை வலியுறுத்தி மனிதனின் தலையில் இருந்து மரக்கிளைகள் படர்வது போல் ஓவியம் வரையப்பட்டு உள்ளது. மேலும் ஒரு குறிப்பிட்ட பழங்குடியின மக்களின் உடை கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான ஓவியமும், ஆந்தையின் கூர்மையான பார்வையை உணர்த்தும் ஓவியமும் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.


Next Story