வருகிற 7-ந் தேதி தொடங்கும் சட்டசபை கூட்டத்தில் ஒரே தேசம்- ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க முடிவு - சபாநாயகர் காகேரி தகவல்
வருகிற 7-ந் தேதி தொடங்கும் சட்டசபை கூட்டத்தில் ஒரே தேசம்-ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக சபாநாயகர் காகேரி கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை சபாநாயகர் காகேரி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 7-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 14, 15-ந் தேதிகளில் பிரதமர் மோடி முன்வைத்துள்ள ஒரே தேசம்-ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, ஜனதா தளம்(எஸ்) தலைவர் குமாரசாமி ஆகியோருடன் பேசியுள்ளேன். இந்த சட்டசபை கூட்டத்தொடரில் கேள்வி நேரம் உள்பட அனைத்து நிகழ்வும் இடம் பெறும். 10 சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முந்தைய மழைக்கால கூட்டத்தொடரில் பின்பற்றப்பட்ட அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் இந்த கூட்டத்தொடரிலும் பின்பற்றப்படும். இந்த கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டுமா? என்பது குறித்து சுகாதாரத்துறையுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
கடந்த குளிர்கால கூட்டத்தொடரில் அரசியல் சாசனம் குறித்து 2 நாட்கள் விவாதிக்கப்பட்டது. இதில் 50 உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர். இந்த உறுப்பினர்கள் பேச்சு அடங்கிய புத்தகம் ஒன்றை தயாரித்து ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்பி வைத்தேன். இந்த முயற்சியை அவர்கள் பாராட்டினர். இவ்வாறு காகேரி கூறினார்.
Related Tags :
Next Story