முதல்-மந்திரி எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் சந்தோஷ் தற்கொலைக்கு முயன்றது ஏன்? பரபரப்பு தகவல்கள்


முதல்-மந்திரி எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் சந்தோஷ் தற்கொலைக்கு முயன்றது ஏன்? பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 28 Nov 2020 11:30 PM GMT (Updated: 28 Nov 2020 8:52 PM GMT)

முதல்-மந்திரி எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் சந்தோஷ் தற்கொலைக்கு முயன்றது ஏன்? என்பது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரு, 

கர்நாடக முதல்-மந்திரியாக பணியாற்றி வருபவர் எடியூரப்பா. இவரது அரசியல் செயலாளர்களாக எம்.எல்.ஏ.க்களான எச்.ஆர்.விஸ்வநாத், ரேணுகாச்சார்யா ஆகியோர் உள்ளனர். மேலும் கடந்த மே மாதம் 28-ந் தேதி பா.ஜனதா கட்சியை சேர்ந்த என்.ஆர்.சந்தோஷ் என்பவர் முதல்-மந்திரி எடியூரப்பாவின் அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். இவர் எடியூரப்பாவின் உறவினர் என்று சொல்லப்படுகிறது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் சந்தோசுக்கும், ஜான்வி என்பவருக்கும் திருமணம் ஆகி இருந்தது. உறவினர், அரசியல் செயலாளர் என்பதால் எடியூரப்பாவுடன், சந்தோஷ் மிக நெருக்கமாக இருந்தார். மேலும் எடியூரப்பா செல்லும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சந்தோசும் கலந்து கொண்டு இருந்தார். சந்தோஷ் தனது மனைவி ஜான்வியுடன், பெங்களூரு டாலர்ஸ் காலனியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வீட்டிற்கு சென்ற சந்தோஷ் தனது அறையில் மயங்கி கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சந்தோசை மீட்டு சிகிச்சைக்காக எம்.எஸ்.ராமய்யா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர்கள் நடத்திய மருத்துவ பரிசோதனையில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்று சந்தோஷ் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

இதுபற்றி அறிந்த முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று முன்தினம் இரவே ஆஸ்பத்திரிக்கு சென்று சந்தோசின் உடல் நலம் பற்றி விசாரித்தார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதுபற்றி அறிந்த சதாசிவநகர் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று சந்தோசின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மனைவியுடன் குடும்ப தகராறு காரணமாக சந்தோஷ் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகின.

இருப்பினும் அரசியல் காரணங்களால் சந்தோசுக்கு பலர் அழுத்தம் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது முதல்-மந்திரியின் உறவினர் என்பதால் சந்தோஷ் இளம் வயதிலேயே, முதல்-மந்திரியின் அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இது பிடிக்காத சிலர் சந்தோசுக்கு எதிராக செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.

இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு எடியூரப்பாவின் ஊடக செயலாளராக இருந்த மகாதேவ் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்ததாக அவர் கூறி இருந்தார். இந்த நிலையில் எடியூரப்பாவின் அரசியல் செயலாளராக இருந்த சந்தோசையும் ராஜினாமா செய்ய கூறி சிலர் அழுத்தம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆனால் சந்தோசுக்கு தொல்லை கொடுத்தது பா.ஜனதா கட்சியை சேர்ந்த தலைவர்களா? முதல்-மந்திரி எடியூரப்பாவின் குடும்ப உறுப்பினர்களா? என்பது தெரியவில்லை. இதற்கிடையே அரசு தொடர்பான ஒரு முக்கிய வீடியோ சந்தோஷ் மூலம் கசிந்து இருப்பதாகவும், அந்த வீடியோ வெளியானால் பா.ஜனதா அரசு கவிழும் நிலை உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் தன்னால் அரசு கவிழ்ந்து விடும் என்ற பயத்தில் சந்தோஷ் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதல்-மந்திரி எடியூரப்பாவின் அரசியல் செயலாளராக இருப்பவர் சந்தோஷ். இவர் எடியூரப்பாவின் நெருங்கிய உறவினரும் ஆவார். இவர் நேற்று முன்தினம் இரவு தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். தற்போது அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றதாக சந்தோஷ் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 309-ன் கீழ் சதாசிவநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர் குணம் அடைந்ததும் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

Next Story