தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம்: கொரோனாவில் இருந்து குணமடைந்து மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்


தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம்: கொரோனாவில் இருந்து குணமடைந்து மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்
x
தினத்தந்தி 29 Nov 2020 3:45 AM IST (Updated: 29 Nov 2020 3:03 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவில் இருந்து குணமடைந்து மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாரத் பால்கே உயிரிழந்தார்.

மும்பை, 

சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டர்பூர் - மங்கல்வேதா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் பாரத் பால்கே (வயது60) . தேசியவாத காங்கிரஸ் கட்சியை சோ்ந்தவர். இவர் கடந்த மாதம் 30-ந் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். பின்னர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பினார்.

இந்தநிலையில் அவருக்கு மீண்டும் காய்ச்சல், இருமல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 9-ந் தேதி புனேயில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது.

இதையடுத்து அவர் வென்லேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் அவர் நேற்று சிகிச்சை பலன்இன்றி உயிரிழந்தார்.

நேற்று முன்தினம் ஆஸ்பத்திரிக்கு சென்ற தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் எம்.எல்.ஏ.வின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

மரணம் அடைந்த பாரத் பால்கே கடந்த 2018-ம் ஆண்டு மராத்தா இடஒதுக்கீடுக்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தவர் ஆவார். பாரத் பால்கே எம்.எல்.ஏ.வின் மறைவுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சட்டசபை எதிர்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், மாநில மந்திரிகள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Next Story