4½ ஆண்டுகளாக சும்மா இருந்து விட்டு தேர்தலுக்காக அறிக்கை விடும் செயல்படாத எதிர்க்கட்சிகள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆவேசம்
கடந்த 4½ ஆண்டுகளாக சும்மா இருந்து விட்டு செயல்படாத எதிர்க்கட்சிகள் எல்லாம் தேர்தலுக்காக அறிக்கை விடத் தொடங்கி உள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவை மாநிலத்தில் இன்னும் 5 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இதுவரை செயல்படாமல் இருந்த எதிர்க்கட்சிகள் எல்லாம் தற்போது மாறி, மாறி அறிக்கை விட தொடங்கியுள்ளன. என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க.வினர் தொடர்ந்து அரசை குறைகூறி வருகின்றனர். எங்கள் அரசு மக்கள்நல திட்டங்களை வெகு வரைவாக நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசு நிதி தராத போதிலும் கவர்னரின் அன்றாட தொல்லைகள் ஒருபுறம் இருந்தாலும் அதையெல்லாம் சமாளித்து இரவு, பகலாக உழைத்து வளர்ச்சியை கொண்டு வந்துள்ளோம்.
கொரோனா, புயல் தாக்கிய போது கூட மக்களை பார்க்காமல் இருந்த எதிர்க்கட்சி தலைவர் தற்போது புதுவையில் எந்த வளர்ச்சியும் இல்லை என்கிறார். அரசு பற்றி தவறான கருத்துகளை மக்களுக்கு கூறி வருகிறார். புயலை சமாளிக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை, உயிர் சேதம் இன்றி பாதுகாத்ததற்காக அரசுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
கடந்த 4½ ஆண்டுகளாக எதிர்க்கட்சி தலைவர் எங்கே இருந்தார்? என்பதே தெரியவில்லை. தற்போது தேர்தல் வரும் நேரத்தில் அறிக்கை விடுகின்றார். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு செவிசாய்க்காவிட்டாலும், நாங்கள் கொண்டு வரும் திட்டங்களுக்கு கவர்னர் முட்டுக்கட்டை போட்டாலும் அதனை எதிர்த்து, சமாளித்து நிர்வாகத்தை நடத்தும்போது எதிர்க்கட்சி தலைவர் மக்கள் பிரச்சினையை முன்வைத்து பேசாமல் தற்போது ஒட்டுமொத்தமாக மாநில அரசை குறை கூறுவது அரசியலுக்காக பேசுகிறார் என்பதை தவிர வேறொன்றும் இல்லை.
மக்கள் நலத்திட்டங்கள் மட்டுமல்லாமல், அரும்பார்த்தபுரம் மேம்பாலம், காமராஜர் மண்டபம், திருக்காஞ்சி பாலம், புதுச்சேரி நகராட்சி கட்டிடம், பாகூர் கலாசார மையம், கிழக்கு கடற்கரை சாலையில் அழகான ஆடிட்டோரியம், காரைக்காலில் நீதிமன்ற வளாகம், நேரு மார்க்கெட், கலைஞர் கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி திட்டம் என நிறைவேற்றி உள்ளோம்.
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கைபேசி மூலமாக கல்வி கற்க வசதியாக டேப் வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற உள்ளோம். மக்கள் அனைவருக்கும் ஆயுள் காப்பீடு திட்டத்தை நிறைவேற்ற உள்ளோம். ஆனால் செயல்படாத எதிர்க்கட்சிகள் அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக குறை கூறுகின்றனர். இதெல்லாம் மக்கள் மத்தியில் எடுபடாது.
ரங்கசாமி தலைமையிலான ஆட்சி இருந்த போது, தங்களை எந்த அளவுக்கு வஞ்சித்தார் என்பது மாநில மக்களுக்கு தெரியும். தற்போது அமைதியாக, நிம்மதியாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் எதிர்கட்சியினர் எதிரிகட்சியாக செயல்படுவது வருத்தமளிக்கிறது. அரசின் நலத் திட்டங்களை நிறைவேற்ற விடாமல் தடுப்பது யார் என்ற உண்மை மக்களுக்கு தெரியும். எதிர்க்கட்சிகள் பொய்யான வதந்திகளை பரப்ப வேண்டாம். அரசு செய்த சாதனைகளை மக்களுக்கு பட்டியல் போட்டுக் கொடுத்துள்ளோம்.
கொரோனாவை சிறப்பான முறையால் கையாண்ட மாநிலம் புதுவை என்று பிரதமர், மத்திய உள்துறை மந்திரி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதனை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். அரசின் நடவடிக்கையால் தான் கடந்த 10 நாட்களாக கொரோனா இறப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. கொரோனா தடுப்பு மருந்து மார்க்கெட்டிற்கு வரும் போது புதுவை மக்களுக்கு அது இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இடைக்கால நிவாரணமாக ரூ.100 கோடி
மத்திய அரசுக்கு, நாராயணசாமி கடிதம்
நிருபர்களிடம் நாராயணசாமி மேலும் கூறுகையில், ‘நிவர் புயல் மழையால் புதுவை நகர பகுதியில் உள்ள மரங்கள் சாய்ந்து விழுந்தன. ஆனால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. அரசின் பல துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டதாலும் நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொண்டதாலும் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்தது. பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சாலைகள் சேதமடைந்துள்ளன. அதனை சரி செய்யும் நிலையில் அரசு உள்ளது. பேரிடர் துறையின் கூட்டத்தை கூட்டி வெள்ளசேத பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டேன். நாங்கள் சேதங்களை பார்வையிட்ட போது புதுவையில் சுமார் ரூ.400 கோடிக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. எனவே மாநில அரசுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.100 கோடி வழங்க வேண்டும் என்று பிரதமருக்கும், மத்திய உள்துறைக்கும் கடிதம் எழுதியுள்ளேன்’ என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story