பயணிகள் தண்டவாளங்களை கடப்பதால் நுங்கம்பாக்கம்-எழும்பூர் இடையே அதிகரிக்கும் ரெயில் விபத்துகள் - நடைமேம்பாலத்தை பயன்படுத்த ரெயில்வே போலீசார் வேண்டுகோள்
நுங்கம்பாக்கம்-எழும்பூர் இடையே பயணிகள் தண்டவாளங்களை கடப்பதால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகின்றன எனவும், நடைமேம்பாலத்தையே பயன்படுத்த வேண்டும் எனவும் ரெயில்வே போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை,
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி மற்றும் மூர்மார்க்கெட்டில் இருந்து ஆவடி, அரக்கோணம், திருத்தணிக்கு 100-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காகவும், பயணச்செலவு குறைவு என்பதாலும் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் மின்சார ரெயிலை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
மின்சார ரெயிலில் செல்லும் பயணிகளில் பலர், தாங்கள் வந்து இறங்கக்கூடிய ரெயில் நிலையம் வந்ததும், முறையாக நடைமேடைகளில் இறங்கி, படிக்கட்டுகளில் ஏறி நடைமேம்பாலங்கள் வழியே செல்வதில்லை. மாறாக, நடைமேம்பால படிக்கட்டுகளில் ஏற சோம்பல்பட்டும், உடனே செல்ல வேண்டும் என்று நினைத்தும் தண்டவாளங்களை நடைபாதையாக பயன்படுத்துகின்றனர்.
இதனால் அதிகளவில் உயிர்ச்சேதம் ஏற்படுகிறது. மேலும், குடும்பத்தின் சுமையை தாங்கி சுமக்கவேண்டிய பலர் தங்களது கை, கால்களை இழந்து, அவர்களே குடும்பத்துக்கு சுமையாகிப் போகின்றனர். இதனால் தண்டவாளங்களை கடக்க வேண்டாம், படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்க வேண்டாம் என ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்புப்படையினரும் தொடர்ந்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.
சென்னையில் நுங்கம்பாக்கம்-எழும்பூருக்கு இடைப்பட்ட பகுதிகளில் அதிகளவில் ரெயில் விபத்துகள் நடப்பதாக ரெயில்வே போலீசார் கூறுகின்றனர். இதுகுறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் கூறியதாவது:-
மின்சார ரெயிலில் பயணிக்கும் பலர், ரெயிலை விட்டு இறங்கியதும், தண்டவாளங்களில் நடந்துசெல்வதை வாடிக்கையாக்கி கொண்டிருக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக, நுங்கம்பாக்கம்-சேத்துப்பட்டு இடையே நமச்சிவாயபுரம் பகுதியில்தான் அதிகளவில் பயணிகள் தண்டவாளங்களை நடைபாதையாக பயன்படுத்துகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் எழும்பூர் ரெயில்வே போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 257 பேர் தண்டவாளங்களை கடக்கும்போது ரெயிலில் அடிப்பட்டு இறந்துள்ளனர்.
அதிலும் நுங்கம்பாக்கம்-சேத்துப்பட்டு இடையே கடந்த 2018-ம் ஆண்டு 25 பேரும், 2019-ம் ஆண்டு 20 பேரும், 2020-ம் ஆண்டு தற்போதுவரை 16 பேரும் ரெயிலில் அடிபட்டு உயிரைப் பறிகொடுத்துள்ளனர். எனவே, பயணிகள் நடைமேம்பாலங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், யாரும் தண்டவாளங்களை கடந்து அல்லது தண்டவாளங்கள் வழியாக வெளியே செல்லாதவகையில் அனைத்து இடங்களிலும் தடுப்புகளை அமைத்தால் உயிர்ச்சேதங்களை தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story