திருவண்ணாமலை நகருக்குள் வெளியூர் பக்தர்கள் வருவதை தடுக்க சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு


திருவண்ணாமலை நகருக்குள் வெளியூர் பக்தர்கள் வருவதை தடுக்க சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு
x
தினத்தந்தி 29 Nov 2020 2:45 PM IST (Updated: 29 Nov 2020 2:32 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை நகருக்குள் வெளியூர் பக்தர்கள் வருவதை தடுக்க போலீசார் மூலம் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலி்ல் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மகா தீபம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்றப்படுகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோவிலில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

தொடர்ந்து இன்றும், நாளையும் (திங்கட்கிழமை) பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

வழக்கமாக மகா தீபத்தின் போது கிரிவலம் செல்லவதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள். இந்த ஆண்டு வெளியூர் பக்தர்கள் நேற்று முதல் நாளை வரை என 3 நாட்கள் திருவண்ணாமலை நகருக்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வெளியூரில் இருந்து வரும் பக்தர்களை தடுக்கும் வகையில் போலீஸ் தரப்பில் திருவண்ணாமலை மாவட்ட எல்லை மற்றும் திருவண்ணாமலை நகர எல்லை சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது போலீசார் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வருபவர்களிடம் உள்ளூர் மக்கள் தானா என்று விவரங்கள் கேட்டறிந்தும், அவர்களிடம் வீட்டு முகவரியை குறித்து கொண்டும் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் இரவு, பகலாக சோதனையில் ஈடுபட்டனர்.

வாணாபுரம் அருகே உள்ள வாழவச்சனூர் தென்பெண்ணை ஆற்றின் அருகே சோதனைச்சாவடி உள்ளது. இதில் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாகன தணிக்கையில் வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து வருகிறார்களா? என்றும் கண்காணித்து வருகின்றனர்.

Next Story