வத்திராயிருப்பு பகுதியில் செங்கல் உற்பத்தி பாதிப்பு - தொழிலாளர்கள் வாழ்வாதாரமின்றி தவிப்பு


வத்திராயிருப்பு பகுதியில் செங்கல் உற்பத்தி பாதிப்பு - தொழிலாளர்கள் வாழ்வாதாரமின்றி தவிப்பு
x
தினத்தந்தி 29 Nov 2020 11:15 AM GMT (Updated: 29 Nov 2020 11:06 AM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர்.

வத்திராயிருப்பு,

விருதுநகர் மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். செங்கல் உற்பத்தியில் பெரும்பாலான செங்கல் சூளைகள் வத்திராயிருப்பு, மேலக்கோபாலபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், இலந்தைகுளம், கூமாபட்டி, ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளன. இந்த பகுதியில் உற்பத்தி செய்யப்படும் செங்கல் விருதுநகர் மாவட்டம் மட்டுமல்லாமல் அருகில் உள்ள மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கட்டிட தொழில் மட்டுமல்லாமல் பிற தொழில்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் நாராயணன் கூறியதாவது:- விருதுநகர் மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். முன்பு செங்கல் உற்பத்தி செய்வதற்கு அருகில் உள்ள குளங்களில் மணல் அள்ளி உற்பத்தி செய்து வந்தோம். தற்போது அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மண் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் தங்களின் நீண்ட கோரிக்கைகளுக்கு பிறகு அரசு செங்கல் உற்பத்தி செய்ய கண்மாய்களிலும், சொந்த பட்டா நிலங்களிலும் மண் எடுக்க மண்பாஸ் வழங்கப்பட்டது. இதன் மூலம் மண் எடுத்து உற்பத்தி செய்து வந்தோம்.தற்போது விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் உள்ளதை காரணம் காட்டி மண் பாஸ் நிறுத்தி வைக்கப்பட்டு பல மாதங்களாகியும் தற்போது வரை மண் எடுக்க பாஸ் வழங்கப்படவில்லை.

இதனால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இருக்கும் மண்ணை வைத்து செங்கல் உற்பத்தி செய்ய வேண்டுமானாலும் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக செங்கல் உற்பத்தியும் பாதித்து பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டு வைத்துள்ள செங்கலின் விலை கடும் உயர்வை எட்டியுள்ள நிலையில் இருக்கின்ற செங்கலை விற்பதற்கு கூட வழியில்லாமல் தவித்து வருகிறோம். இது மட்டுமல்லாமல் செங்கல் சூளைகளில் பணிபுரியும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேறுவேலை இன்றி தவித்து வருகின்றனர்.தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story