மார்க்கெட்டில் கழிவுநீர் தேங்கியதால் தெருவில் மீன் விற்கும் வியாபாரிகள்


மார்க்கெட்டில் கழிவுநீர் தேங்கியதால் தெருவில் மீன் விற்கும் வியாபாரிகள்
x
தினத்தந்தி 29 Nov 2020 11:30 AM GMT (Updated: 29 Nov 2020 11:39 AM GMT)

ராமநாதபுரம் மீன்மார்க்கெட்டில் சாக்கடை கழிவுநீர் தேங்கியதால் தெருவில் வைத்து வியாபாரிகள் மீன்விற்பனை செய்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து வருகிறது. இதன்காரணமாக ராமநாதபுரம் நகரில் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைவெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இதுதவிர, ராமநாதபுரம் சாலைத்தெரு பகுதி முதல் ரோமன் சர்ச் பகுதி வரை 10-க்கும் மேற்பட்ட பாதாள சாக்கடை அமைந்துள்ளன. அதில் பல நாட்களாக அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் செல்ல வழியில்லாமல் சாலைகளிலும், கடைகளை சுற்றிலும் தேங்கி நிற்கின்றன.

இந்த கழிவுநீரை அகற்ற நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிங்காரத்தோப்பு பகுதியில் அமைந்துள்ள கழிவுநீரேற்று நிலையம் சரியாக வேலை செய்யாததால் கழிவுநீர் செல்ல முடியாமல் உள்ளது. இதுபோன்ற காரணங்களினால் கழிவுநீர் முக்கிய வியாபார பகுதிகளை சுற்றிலும் தேங்கி நின்று வந்தது.

இந்தநிலையில் தொடர்ந்து பெய்த மழையால் கழிவுநீரும், மழைநீரும் சேர்ந்து மீன்மார்க்கெட் பகுதியில் தேங்கி நிற்கிறது. கடந்த வாரம் இந்த அவலநிலையை கண்டித்து வியாபாரிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து கலெக்டரின் உத்தரவின்படி உடனடியாக கழிவுநீர் அப்புறப்படுத்தப்பட்டது.

நேற்று முன்தினம் ராமநாதபுரத்தில் நல்ல மழை பெய்தது. இந்த மழையால் மீன்மார்க்கெட் பகுதியை மீண்டும் மழைநீரும், கழிவுநீரும் சூழ்ந்து கொண்டது. இந்த கழிவுநீருக்குள் நடந்து சென்று மீன்கள் வாங்க பொதுமக்கள் தயங்கி மீன்களை வாங்காமல் திரும்பி சென்றுவந்தனர். இதனால் மீன் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் வேறு வழியின்றி மீன்களை எடுத்துக்கொண்டு ரோட்டிற்கு வந்து திடீரென்று கடையை அமைத்து மீன்களை கூவிகூவி விற்பனை செய்தனர்.

இதனை தொடர்ந்து மீன்மார்க்கெட் நிர்வாகத்தினர் தனியார் வாகனங்கள் மூலம் மீன்மார்க்கெட்டிற்குள் இருந்த கழிவுநீர் மழைநீரை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மீன்மார்க்கெட் மற்றும் காய்கறி மார்க்கெட்டை சுற்றிலும் கழிவுநீர் செல்லும் வழிகள் ஆக்கிரமிக்கப்பட்டு அடைக்கப்பட்டுவிட்டதால் செம்மண்குண்டு ஊருணிக்கு தண்ணீர் செல்ல முடியாமல் இந்த மார்க்கெட் பகுதிக்குள் தேங்கிவிட்டது. இதுதவிர, சாலைகள் உயரமாக போடப்பட்டுவிட்டதாலும் அனைத்து மழைநீரும் மீன்மார்க்கெட்டிற்குள் நுழைந்துவிட்டது. இதற்கு உடனடியாக நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ராமநாதபுரம் உழவர் சந்தை அருகில் அரசின் சார்பில் புதிய மீன்மார்க்கெட் கட்டி முடிக்கப்பட்டு பலமாதங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. அதை திறக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story