காரைக்குடி நகரில் சாலையில் திடீர் குளமா? வாகன ஓட்டிகள் திகைப்பு - சீரமைக்க கோரிக்கை


காரைக்குடி நகரில் சாலையில் திடீர் குளமா? வாகன ஓட்டிகள் திகைப்பு - சீரமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 29 Nov 2020 12:00 PM GMT (Updated: 29 Nov 2020 11:49 AM GMT)

காரைக்குடி நகரில் பாதாள சாக்கடை பணி காரணமாக சாலை குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் திடீர் குளமா? என திகைப்பு அடைந்து உள்ளனர். அந்த சாலையை சீரமைக்க கோரி ஆணையாளரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் காரைக்குடியும் ஒன்று. இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் அடிப்படை தேவையான பாதாள சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி ரூ.124 கோடியில் கடந்த 2 ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நகரில் முக்கியமான வீதிகளில் நிறைவு பெற்று விட்டது. தற்போது காரைக்குடி செஞ்சை பகுதியில் பாதாள சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு சாலையின் நடுவில் ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு அதில் குழாய்கள் பதிக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.

இதற்கிடையே பாதாள சாக்கடை கால்வாய் பணி நிறைவு பெற்ற இடங்களில் தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படவில்லை. அங்கு தோண்டப்பட்ட குழியில் மண்ணை நிரப்பி உள்ளனர். சரியாக மூடாததால் ஆங்காங்கே திடீர் பள்ளங்கள் ஏற்பட்டன. குறிப்பாக காரைக்குடி அண்ணாசிலை முதல் பழைய பஸ் நிலையம் வரையும், முதல் பீட் முதல் கழனிவாசல் வரையும், காரைக்குடி பெரியார் சிலை முதல் அண்ணா சிலை வரையும், காரைக்குடி செஞ்சை பகுதி முதல் ரஸ்தா வரையும் பாதாள சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி முடிவடைந்தும் தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது பெய்த மழையால் காரைக்குடி முதல் பீட் பகுதியில் சாலையில் குளம் போல தண்ணீர் தேங்கி நிற்கிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் என்ன சாலையில் திடீர் குளமா? என வியப்படைந்து, அதை மிகுந்த சிரமத்துடன் கடந்து செல்கின்றனர். இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தனர். பிரதான சாலை என்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

பாதாள சாக்கடை திட்டம் மக்களுக்கு பயன்பெற கூடிய திட்டம் தான். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக நகரில் பல்வேறு இடங்களில் குழி தோண்டப்பட்டு குழாய்கள் அமைக்கப்பட்டன. பல இடங்களில் பணிகள் முடிந்து விட்டன. ஆனால் இன்னும் அப்பகுதியில் தார்ச்சாலை போடவில்லை. குண்டும்-குழியுமான சாலையால் காரைக்குடி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். செஞ்சை பகுதியில் பாதாள சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது. அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்த நிலையில் செஞ்சை பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடித்து புதிதாக தார்ச்சாலை அமைத்து தரவேண்டும் என்று காரைக்குடி நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Next Story