இயற்கை காய்கறி சாகுபடி செய்வதாக ரூ.1¼ கோடி மோசடி; தலைமறைவாக இருந்தவர் கைது


இயற்கை காய்கறி சாகுபடி செய்வதாக ரூ.1¼ கோடி மோசடி; தலைமறைவாக இருந்தவர் கைது
x
தினத்தந்தி 29 Nov 2020 6:45 PM IST (Updated: 29 Nov 2020 6:26 PM IST)
t-max-icont-min-icon

இயற்கை காய்கறி சாகுபடி செய்வதாக ரூ.1¼ கோடி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை,

திருமங்கலத்தை அடுத்த வில்லூர் லாலாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு ஜெகதீசன் என்ற மகன் உள்ளார். இவர்களுக்கு சொந்தமாக சில ஏக்கர் நிலம் உள்ளது. இந்தநிலையில் பாலி குடில் அமைத்து இயற்கை முறையில் காய்கறிகளை பயிரிடும் சென்னையை சேர்ந்த இந்தியா கிரீன் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஜான் ஜேசுதாஸ், மாதவன் உள்ளிட்ட சிலர், செல்வராஜையும், அவரது மனைவியையும் சந்தித்தனர்.

பின்னர் தங்களது இடத்தில் இயற்கை விவசாயம் செய்து, காய்கறி, பழங்களை விளைவித்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். இதற்காக வங்கியில் கடன் பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தனர். இதை நம்பிய கணவன்-மனைவி இருவரும், தங்களின் நிலத்தில் பாலிகுடில் அமைத்து இயற்கை விவசாயம் செய்ய ஒப்புக்கொண்டனர். அதன்பேரில் திருமங்கலத்தில் உள்ள ஒரு வங்கிக்கு அவர்களை அந்த நிறுவனத்தினர் அழைத்து சென்றுள்ளனர். அங்கு கடன் வழங்குவது தொடர்பாக வங்கி மேலாளரிடமும் பேசியுள்ளனர்.

அதன்பின்பு இயற்கை விவசாயம் செய்வதற்கு மொத்தம் ரூ.1 கோடியே 20 லட்சம் செலவாகும் என்றும், அந்த தொகையில் ரூ.30 லட்சத்தை மட்டும் நில உரிமையாளர் வழங்கிவிட்டால் மீதி தொகையான ரூ.90 லட்சத்தை வங்கி கடனாக பெற்று தொழிலை தொடங்கி விடலாம் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து செல்வராஜ் தன்னுடைய நிலம், வீடு உள்ளிட்ட சொத்துக்களை அடமானமாக வைத்து மும்பை கணேஷ் கிரீன் ஹவுஸ் நிறுவனம், புனே சரோஜா கிரீன் ஹவுஸ் நிறுவனத்திற்கு மொத்தம் ரூ.1 கோடியே 20 லட்சத்தை கொடுத்துள்ளார்.

ஆனால் அந்த தொகையை வாங்கிக்கொண்ட அவர்கள், காய்கறி சாகுபடிக்கான பணிகளை செய்யாமல் மோசடி செய்தனர். இதுகுறித்து சுப்புலட்சுமி மதுரை மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த கோர்ட்டு, புகாரின்பேரில் வழக்குபதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஆண்டு நிறுவன பங்குதாரர்களான சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ஜான் ஜேசுதாஸ், மாதவன், அருள்முருகன், வங்கி மேலாளர்கள் ராஜ்குமார், காளிதாஸ்பாண்டியன், கணேஷ் கிரீன் ஹவுஸ் நிறுவன உரிமையாளர் விக்ரம்கடம், புனேயில் உள்ள சரோஜா கிரீன் ஹவுஸ் நிறுவன உரிமையாளர் அனில்ராவத், திண்டுக்கல்லை சேர்ந்த ராஜபாண்டி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் ஓராண்டாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான ஜான்ஜேசுதாசை தற்போது போலீசார் கைது செய்தனர்.

Next Story