சோழவந்தான் பகுதியில் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதி
சோழவந்தான் பகுதியில் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். அந்த பகுதியை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சோழவந்தான்,
சோழவந்தான் பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. நேற்றுமுன்தினம் காலை முதல் சாரல் மழை மாலையில் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சோழவந்தான், சோலைநகர், வ.உ.சி.நகர், நகரி ரோடு, ஆலங்கொட்டாரம், ரிஷபம், திருமால் நத்தம், நெடுங்குளம், திருவாலவாய நல்லூர், ராயபுரம், திருவேடகம் ஆகிய ஊர்களில் அபிவிருத்தி பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கி பொதுமக்கள் வெளியே வரமுடியாத நிலையில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதேபோல் இப்பகுதியில் நாற்று நடப்பட்ட வயல்கள், நெல்விளைந்த வயல்கள் மற்றும் வாழைத்தோட்டங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.
இதனால் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்களும், நாற்று நட்ட வயலும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ராயபுரம் கிராமத்தில் ஜெர்மன் நகருக்குள் மழைநீர் வீடுகளை சுற்றி தேங்கியுள்ளது. இதில் சில வீட்டிற்குள் மழைநீர் புகுந்ததால் அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
மேலும் இருதயமேரி என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதைதொடர்ந்து பொதுப்பணித்துறை உதவி என்ஜினீயர் செல்லையா மற்றும் வருவாய் ஆய்வாளர் ராஜன் ஆகியோரிடம் அந்த பகுதி மக்கள் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மேலும் மதுரை மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரியங்கா, மாணிக்கம் எம்.எல்.ஏ., தாசில்தார் பழனிகுமார், வாடிப்பட்டி யூனியன் ஆணையாளர்கள் சாந்திராணி, ராஜா, யூனியன் தலைவர் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா, ரிஷபம் ஊராட்சி மன்ற தலைவர் சிறுமணி என்ற மணி, நகர செயலாளர் கொரியர் கணேசன், ஆலயமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்திருந்தனர்.
மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினர். தாசில்தார் பழனிகுமார் உத்தரவின் பேரில் நில அளவையர் குமார், கிராம நிர்வாக அலுவலர் முத்துப்பாண்டி மற்றும் கிராம உதவியாளர்கள் ஆகியோர் வாய்க்காலில் ஆக்கிரமித்துள்ள இடங்களை அளந்து எடுத்தனர். பின்னர் அதிகாரிகள் திருவாலவாய நல்லூர், திருவேடகம், கட்டக்குளம் மற்றும் கச்சைகட்டி பகுதிகளில் மழை சேதங்களை பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story