மழையால் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு பசுமை வீடு, ரூ.1 லட்சம் நிவாரணம் - அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்


மழையால் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு பசுமை வீடு, ரூ.1 லட்சம் நிவாரணம் - அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்
x
தினத்தந்தி 29 Nov 2020 2:15 PM GMT (Updated: 29 Nov 2020 2:06 PM GMT)

மழையால் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு பசுமை வீடு, ரூ.1 லட்சம் நிவாரண உதவியாக அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழையினால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளை மழைவெள்ளம் சூழ்ந்துள்ளது.

மேலும் இந்த மழையினால் விழுப்புரம் அருகே கோனூர் மாரியம்மன் கோவில் தெருவில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தூங்கிக்கொண்டிருந்த கந்தசாமியின் மனைவி ராஜேஸ்வரி (வயது 42) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று காலை கோனூர் கிராமத்திற்கு சென்று அங்கு மழையினால் உயிரிழந்த ராஜேஸ்வரியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவர்களுக்கு பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினார்.

மேலும் அமைச்சர் சி.வி.சண்முகம் தனது சொந்த செலவில் அந்த குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவியையும் வழங்கினார்.

அப்போது சக்கரபாணி எம்.எல்.ஏ., அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பெரும்பாக்கம் ராஜா, ராமதாஸ், சுரேஷ்பாபு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஷெரீப், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன், ஒன்றிய அவைத்தலைவர் அன்பழகன், காணை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ரவிசங்கர், கோனூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீபதி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத்தலைவர் வண்டிமேடு ராமதாஸ், கூட்டுறவு அச்சக துணைத்தலைவர் குமரன், நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் வக்கீல் செந்தில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கண்டமானடி ராஜி, கிளை செயலாளர் சங்கர், வசந்தி ஏழுமலை உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story