மகன் பிறந்தநாளை மாமியார் வீட்டில் கொண்டாடியதால் மனைவி அடித்துக் கொலை - செஞ்சி அருகே கணவர் வெறிச்செயல்
செஞ்சி அருகே மகன் பிறந்தநாளை மாமியார் வீட்டில் கொண்டாடிய ஆத்திரத்தில் மனைவியை அடித்துக் கொன்ற பெயிண்டர் கைது செய்யப்பட்டார். இந்த பரபரப்பு சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஏதாநெமிலி கிராமத்தை சேர்ந்தவர் கோபால். இவரது மகள் நந்தினி (வயது 26). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த முத்து மகன் பெயிண்டரான சுரேஷ் (35) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் நந்தினி தனது 2-வது மகன் கிரித்திசின் பிறந்த நாள் விழாவை, தனது தாய் வீட்டில் கேக் வெட்டி கொண்டாடினார்.
விழா முடிந்ததும் இரவு தனது வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் சுரேஷ் தனது மகன் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக, கேக் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்றார்.
அப்போது அங்கிருந்த நந்தினி, கிரித்திசின் பிறந்த நாளை தனது தாய் வீட்டில் கொண்டாடியது குறித்து அவரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதோடு, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நந்தினி மயங்கி கீழே விழுந்தார்.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வெள்ளிமேடுபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், நந்தினி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து நந்தினியின் தாய் ராதா செஞ்சி போலீசில் புகார் அளித்தார். அதில் தனது மகளிடம், சுரேஷ் மற்றும் அவரது பெற்றோர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்தனர். இந்த நிலையில் எனது பேரன் கிரித்திஷ் பிறந்த நாளை மகளுடன் சேர்ந்து கொண்டாடினேன். இதையறிந்த சுரேஷ் எனது மகளிடம் தகராறு செய்து, அவரை அடித்துக் கொலை செய்துள்ளார். எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு, சப்-இன்ஸ்பெக்டர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். மகன் பிறந்த நாளை மாமியார் வீட்டில் கொண்டாடிய மனைவியை, கணவர் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story