நெல்லிக்குப்பம் பகுதியில் மழை நீரில் மூழ்கி அழுகும் நெற்பயிர்கள் - விவசாயிகள் கவலை


நெல்லிக்குப்பம் பகுதியில் மழை நீரில் மூழ்கி அழுகும் நெற்பயிர்கள்  - விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 29 Nov 2020 2:45 PM GMT (Updated: 29 Nov 2020 2:37 PM GMT)

நெல்லிக்குப்பம் பகுதியில் மழை நீரில் மூழ்கி நெற் பயிர்கள் அழுகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

நெல்லிக்குப்பம்,

வங்க கடலில் உருவான நிவர் புயல் , புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடந்து சென்றது. புயல், கடந்த சென்ற இடங்களில் நல்ல மழையை கொடுத்து சென்றது. அந்தவகையில் கடலூரிலும் மழை வெளுத்து வாங்கியது. புயல் கரையை கடந்து 2 நாட்கள் ஆனாலும் இன்னும் அதனால் ஏற்பட்ட வெள்ள நீர் வடிந்தபாடில்லை. குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்று வருகிறது.

குறிப்பாக சம்பா சாகுபடி செய்யப்பட்ட நெல்வயல்கள் அனைத்தும் மழைநீரில் மிதக்கிறது. அந்த வகையில் நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், மருதாடு, அண்ணாகிராமம், நடுவீரப்பட்டு, பல்லவராயநத்தம், ரெட்டிச்சாவடி, தூக்கணாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1,500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதில் சில பகுதியில் நெற்கதிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தவை என்பது தான் வேதனையின் உச்சமாகும். நெல் வயல்களை சூழ்ந்த வெள்ள நீரை விவசாயிகள் வடிய வைத்தும் இன்னும் வடிந்தபாடில்லை.

நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், மருதாடு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரை வெளியேற்றுவது என்பது விவசாயிகளுக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. இதில் மருதாடு பகுதியில் சுமார் 20 ஏக்கரில் இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த நெற்பயிர்கள் மழைநீருக்குள் மூழ்கிக்கிடக்கிறது. கன மழை பெய்து 3 நாட்கள் ஆகியும் எந்த அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு வந்து, மழைநீரை வடிய வைக்க எந்த உதவியும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டுகிறார்கள் இப்பகுதி விவசாயிகள்.

நடப்பு ஆண்டில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு சம்பா சாகுபடியை தொடங்கினோம். நெற்பயிர்கள் கதிர்வரும் தருவாயில் இருந்த நிலையில் தற்போது தண்ணீரில் மூழ்கி உள்ளது. மழைநீர் இன்னும் முழுமையாக வடியாததால், பயிர்கள் அனைத்தும் நிலத்திலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய அரசு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன், வயலில் தேங்கிய மழைநீரை வெளியேற்றவும் உதவிட வேண்டும் என்று கவலையுடன் தெரிவிக்கிறார்கள் அந்த பகுதி விவசாயிகள்.

Next Story