தையல் பயிற்சிக்கு சென்ற போது பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது


தையல் பயிற்சிக்கு சென்ற போது பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 Nov 2020 3:15 PM GMT (Updated: 29 Nov 2020 3:04 PM GMT)

திருப்பூரில் தையல் பயிற்சிக்கு சென்றபோது பள்ளி மாணவியை ஏமாற்றி பலாத்காரம் செய்த வாலிபரை திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர்,

திருப்பூர் போயம்பாளையம் குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் ரகுமான் (வயது 19). பனியன் நிறுவன தொழிலாளி. இவருக்கும் திருப்பூரைச் சேர்ந்த அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவிக்கும் இடையே கடந்த 2 மாதமாக பழக்கம் இருந்து வந்துள்ளது. அந்த மாணவி ஊரடங்கு காலத்தில் பள்ளி செயல்படாததால் ஒரு தையல் பயிற்சி பள்ளியில் படிக்க சென்றுள்ளார்.

அப்போது மாணவிக்கு ரகுமானுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தனிமையில் சந்தித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி மிகவும் சோகமாக இருந்துள்ளார். இதனால் அவரது தாயார் மாணவிடம் கேட்டுள்ளார். அப்போது மாணவி தனக்கு நேர்ந்த கதியை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் அனுராதா மற்றும் ஏட்டு பொன்மணி ஆகியோர் விசாரணை நடத்தியதில் ரகுமான் அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பலமுறை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரகுமானை போலீசார் கைது செய்தனர்.

Next Story