கூடலூர் பகுதியில் மேரக்காய் விளைச்சல் அமோகம்...விலையோ சோகம்
கூடலூர் பகுதியில் கோடை கால பயிரான மேரக்காய் விளைச்சல் அமோகமாக இருந்தும், கொள்முதல் விலை விவசாயிகளுக்கு சோகத்தை தரக்கூடியதாக சரிந்துள்ளது.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் பெய்து வருகிறது. இதற்கு ஏற்ப மழைக்காலத்தில் வளரக்கூடிய பயிர்களான நெல், இஞ்சி, ஏலக்காய் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் நடவு செய்கின்றனர். பின்னர் மழைக்காலம் முடிவடைந்து கோடை காலம் தொடங்கிய உடன் வெயிலை சமாளித்து வளரக்கூடிய பஜ்ஜி மிளகாய், பீன்ஸ், அவரைக்காய், பாகற்காய், புடலங்காய், மேரக்காய் உள்ளிட்ட காய்கறி பயிர்களை பயிரிடுகின்றனர்.
இந்த நிலையில் கூடலூர் பகுதியில் வடகிழக்கு பருவமழை சரிவர பெய்ய வில்லை. மேலும் இனிவரும் நாட்கள் கோடை காலம் என்பதால் அதற்கு ஏற்ப வளரக்கூடிய பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இதற்கு ஏற்ப வழக்கத்துக்கு மாறாக வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. தற்போது கூடலூர் பகுதியில் உள்ள குற்றிமுற்றி, மண்வயல், பாடந்தொரை, பாலம்வயல் உள்பட பல இடங்களில் ஏக்கர் கணக்கில் மேரக்காய்கள் விளைந்துள்ளது.
இருப்பினும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விளைச்சல் அதிகரித்தாலும் கொள்முதல் விலை அடியோடு சரிந்துள்ளது. இதனால் செலவழித்த தொகையை பெற முடியாமல் போய் விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மேரக்காய் கிலோ ரூ. 35 வரை விலை கிடைத்தது. இதனால் நல்ல லாபமும் கிடைத்தது. அதன் பின்னர் விலை குறைய தொடங்கியது. கடந்தாண்டு ரூ. 10 முதல் 15 வரை விலை கிடைத்தது. இதனால் நஷ்டம் ஏற்படவில்லை. ஒரு ஏக்கருக்கு சுமார் 3 டன் மேரக்காய் அறுவடை செய்யலாம். அதற்கு பராமரிப்புச் செலவு ரூ 2 லட்சம் வரை ஆகிறது. நடப்பாண்டில் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ. 2 முதல் 4 வரை மட்டுமே கிடைக்கிறது. இதனால் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உருவாகி உள்ளது. மேரக்காய் விளைச்சல் அமோகமாக இருந்தும், கொள்முதல் விலை விவசாயிகளுக்கு சோகத்தை தரக்கூடியதாக சரிந்துள்ளது.கூடலூர் பகுதியில் விளைவிக்கப்படும் மேரக்காய்கள் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் பெரும்பான்மையாக கொண்டு செல்லப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story