அந்தியூர் அருகே பரபரப்பு: கள்ளக்காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை - உறவினர்கள் கண்டித்ததால் விபரீத முடிவு


அந்தியூர் அருகே பரபரப்பு: கள்ளக்காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை - உறவினர்கள் கண்டித்ததால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 29 Nov 2020 4:30 PM GMT (Updated: 29 Nov 2020 4:28 PM GMT)

அந்தியூர் அருகே உறவினர்கள் கண்டித்ததால் கள்ளக்காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அந்தியூர்,

அந்தியூர் சென்னம்பட்டி அருகே உள்ள ஜர்த்தல் கிராமத்தை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 38). அவருடைய மனைவி வனிதா. இவர்களுடைய மகன் அகில் (9). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (30). அவருடைய மனைவி கலையரசி (28). இவர்களுக்கு நிதிஷா (10), கார்நிஷா (7) ஆகிய 2 மகள்களும், சுகேஷ் (3) என்ற மகனும் உள்ளனர்.

ராஜேந்திரன் வீடு அருகே விஜயராகவன் குடும்பத்துடன் வசித்து வந்தார். மேலும் அவர், ராஜேந்திரனுடன் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இதனால் விஜயராகவன் ராஜேந்திரனை பார்க்க அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அவருக்கும், ராஜேந்திரனின் மனைவி கலையரசிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர்.

இந்த விஷயம் ராஜேந்திரன் மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்தது. மேலும் விஜயராகவனும், கலையரசியும் உறவு முறையில் அண்ணன்-தங்கை ஆவார்கள். இதனால் அவர்கள் விஜயராகவனையும், கலையரசியையும் அழைத்து கண்டித்துள்ளார்கள். எனினும் அவர்களால் கள்ளக்காதலை கைவிட முடியவில்லை. தொடர்ந்து பழகி வந்துள்ளனர்.

ஆனாலும் கள்ளக்காதல் ஜோடி உறவினர்கள் தங்களை பிரிந்து விடுவார்களோ? என்று பயந்தார்கள். இதனால் மனமுடைந்த அவர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். மேலும் நேற்று முன்தினம் இரவு இதுபற்றி விஜயராகவன் தனது உறவினர் ஒருவரிடம் நாங்கள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள போகிறோம் என்று செல்போனில் கூறியுள்ளார். இதுபற்றி உடனே அவர் அந்தியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பிறகு சிறிது நேரத்தில் விஜயராகவனும், கலையரசியும் மோட்டார்சைக்கிளில் அந்தியூர் அருகே உள்ள கெட்டிசமுத்திரம் ஏரி பகுதிக்கு சென்றுள்ளனர். ஏரி கரையில் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு அதில் தங்கள் செல்போன்களை 2 பேரும் வைத்துள்ளனர். அதன்பின்னர் அருகே இருந்த 40 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இதற்கிடையே உறவினர் கூறிய தகவலின் பேரில் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசாரும், தீயணைப்பு நிலைய அதிகாரி ஜேசுராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்கள்.

பின்ன கயிறு கட்டி கிணற்றில் இறங்கி விஜயராகவன், கலையரசியின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தார்கள்.

அதன்பின்னர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அந்தியூர் அருகே கள்ளக்காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story