கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறினால் வணிக வளாகங்கள்-தியேட்டர்களுக்கு சீல் வைக்கப்படும் - கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை


கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறினால் வணிக வளாகங்கள்-தியேட்டர்களுக்கு சீல் வைக்கப்படும் - கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை
x
தினத்தந்தி 30 Nov 2020 4:15 AM IST (Updated: 30 Nov 2020 12:41 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறினால், வணிக வளாகங்கள்-தியேட்டர்களுக்கு சீல் வைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தை கொரோனா தொற்று பரவல் இல்லாத மாவட்டமாக உருவாக்க தியேட்டர் உரிமையாளர்கள், திருமண மண்டபம் உரிமையாளர்கள் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறோம். ஆனால், முழுமையாக இன்னும் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்படவில்லை. எனவே, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தியேட்டர் உரிமையாளர்கள், திருமண மண்டபம் உரிமையாளர்கள் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

பொதுமக்கள் அதிகமாக கூடும் திருமண மண்டபங்கள், தியேட்டர்கள், சூப்பர் மார்கெட் உள்ளிட்ட வணிக வளாகங்களில் கொரோனா தொற்று பரவல் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக திருமண மண்டபங்களில் பொதுமக்கள் அதிகமாக கூடும் சூழ்நிலை உள்ளது. எனவே மண்டபத்தை பதிவு செய்ய வருபவர்களிடம் மண்டப உரிமையாளர்கள் முன்னதாகவே கொரோனா தொற்று பரவலை தடுக்கும் அரசின் விதிமுறைகளை தெரிவிக்க வேண்டும். மண்டபத்துக்கு வரும் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். மேலும் சாணிடைசர் மற்றும் கைகழுவும் திரவம் ஆகியவற்றை பயன்படுத்துவதை கண்காணிக்க வேண்டும். அவ்வப்போது ஒலிபெருக்கிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு முககவசங்கள் மற்றும் சானிடைசர், கை கழுவும் திரவம் உள்ளிட்டவைளை மண்டப உரிமையாளர்களே வழங்கிவிட்டு அதற்கான செலவினத்தொகையை மண்டபம் பதிவு செய்தவர்களிடம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆகியோர் திருமண மண்டபங்கள், தியேட்டர்கள், சூப்பர் மார்கெட் உள்ளிட்ட வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை திடீர் ஆய்வு மேற்கொண்டு கண்காணிப்பார்கள். ஆய்வின்போது முதல்வாரத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறினால் எச்சரிக்கை செய்து கடைபிடிக்க வலியுறுத்தப்படும். 2-வது வாரத்தில் மீண்டும் விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டால் வரும் காலங்களில் சம்பந்தப்பட்ட திருமண மண்டபங்கள், தியேட்டர்கள், சூப்பர் மார்கெட் உள்ளிட்ட வணிக வளாகங்களுக்கு மூடி சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் வழிபாட்டு தலங்களில் மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் இருப்பதை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். அங்கு வருபவர்கள் சாணிடைசர் மற்றும் கைகழுவும் திரவம் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். கொரோனா தொற்று பரவல் முதல் அலை ஓய்ந்துவிட்டது. ஆனால் இரண்டாவது அலை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

எனவே அரசின் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதில் மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளித்து தடுப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் இல்லை என்ற நிலையை உருவாக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், சுகாதார பணிகள் துணை இயக்குநர்கள் கிருஷ்ணலீலா (தூத்துக்குடி) , அனிதா (கோவில்பட்டி) , மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார் மற்றும் அலுவலர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், திருமண மண்டபம் உரிமையாளர்கள் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story