தென்காசியில் ஓட்டல்களில் பயன்படுத்திய சமையல் எண்ணெயை பயோடீசலாக மாற்றும் திட்டம் - கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்
ஓட்டல்களில் பயன்படுத்திய சமையல் எண்ணெயை பயோடீசலாக மாற்றும் திட்டத்தை தென்காசியில் மாவட்ட கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்.
தென்காசி,
ஓட்டல்கள், வணிக நிறுவனங்களில் உபயோகப்படுத்திய சமையல் எண்ணெயை பயோ டீசலாக மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழா, தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி, ஓட்டல்கள், வணிக நிறுவனங்களில் உபயோகித்த சமையல் எண்ணெயை மறு பயன்பாட்டுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
பெரிய ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், கடைகளில் தினமும் உணவு பொருட்கள் தயாரிக்க சமையல் எண்ணெய் பயன்படுத்துகின்றனர். உபயோகித்த சமையல் எண்ணெயை சிலர் வடிகால்களிலும், நீர்நிலைகளிலும் கொட்டுகிறார்கள். சிலர் இந்த எண்ணெயை சோப்பு கம்பெனிகளுக்கும், பாய்லர் எரிசக்திக்காகவும் கொடுக்கிறார்கள். மேலும் இதனை சிறிய கடைகள், சாலையோர உணவு கடைகளிலும் பயன்படுத்துவதாக புகார்கள் தொடர்ந்து வருகின்றன.
எனவே உபயோகித்த எண்ணெய்யை மறு பயன்பாட்டிற்கு வழங்கம் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக உபயோகித்த எண்ணெயை ஆர்.யூ.சி.ஓ. திட்டத்திற்கு அளித்தால் இந்த எண்ணெய் பயோ டீசலாக மாற்றப்படுகிறது. இதன் மூலம் நாட்டின் அன்னிய செலவாணியை குறைக்க முடியும்.
இந்த திட்டத்தில் வியாபாரிகள் எளிதில் இணைந்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் முகவர்களை தொடர்பு கொண்டு உபயோகித்த எண்ணையை எடுத்து செல்ல குறிப்பிட்ட நேரத்தை தெரிவிக்க வேண்டும்.
பின்னர் அந்த முகவர் எண்ணெய்யை பரிசோதனை மீட்டர் கொண்டு சோதித்து பார்த்துவிட்டு அதற்கு விலையை கூறுவார். முகவர் குறிப்பிட்ட விலையை வியாபாரி ஏற்றால் வியாபாரம் செய்து கொள்ளலாம்.
இதன் மூலமாக வியாபாரிகளுக்கு போதிய வருவாய் கிடைக்கிறது. மேலும் வியாபாரிகளின் சுமையை வருவாயாக மாற்றி கொள்ளலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த முகவர்களை வரவேற்க வேண்டும். உபயோகித்த எண்ணெய் சேகரிப்பு மையங்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீஸ் சந்திரபோஸ், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் கணேசன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மகாராஜன், முகமது இஸ்மாயில், அப்துல் ஹக்கீம், செல்வராஜ், ரவி மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story