சிவகிரி அருகே திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்ற இளம்பெண் மீது தாக்குதல் - மணமகன் உள்பட 7 பேர் மீது வழக்கு
சிவகிரி அருகே திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்ற இளம்பெண்ணை தாக்கிய மணமகன் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகிரி,
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே வயலிமிட்டா சிவஞானபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் ராமர் (வயது 27). கூலி தொழிலாளியான இவருக்கும், உறவுக்கார பெண்ணுக்கும் நேற்று முன்தினம் பக்கத்து ஊரான தென்மலை கோவிலில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது அங்கு வந்த இளம்பெண் தன்னை ராமர் காதலித்து நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை கைவிட்டு விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்வதாகவும் கூறி, திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்றார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ராமர் மற்றும் குடும்பத்தினர் அந்த இளம்பெண்ணை தாக்கினர். இதில் காயம் அடைந்த அந்த இளம்பெண், சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக அந்த இளம்பெண் அளித்த புகாரின்பேரில் ராமர், அவருடைய தந்தை ஆறுமுகம், தாயார் வள்ளிக்கண்ணு, அண்ணன் பாலகிருஷ்ணன், அக்காள் செல்வி, உறவினர்களான லட்சுமி, காளியப்பன் ஆகிய 7 பேர் மீது சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ராமருக்கும், உறவுக்கார பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தை தடுத்த நிறுத்த முயன்ற இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story