500 மீட்டர் தூரத்தை கடக்க 48 கிலோமீட்டர் தூரம் சுற்றி வர வேண்டியுள்ளது புதிய மேம்பாலம் வழியாக செல்ல அனுமதிக்குமாறு - பொதுமக்கள் கோரிக்கை


500 மீட்டர் தூரத்தை கடக்க 48 கிலோமீட்டர் தூரம் சுற்றி வர வேண்டியுள்ளது புதிய மேம்பாலம் வழியாக செல்ல அனுமதிக்குமாறு - பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 29 Nov 2020 10:45 PM GMT (Updated: 29 Nov 2020 8:40 PM GMT)

500 மீட்டர் தூரத்தை கடக்க 48 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டியுள்ளது. ஆகவே புதிய மேம்பாலம் வழியாக செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊத்துக்கோட்டை, 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணி அணை உள்ளது. இந்த அணை ஊத்துக்கோட்டை நகர எல்லையில் பாய்கிறது. இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் ஆரணி ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். அப்படி திறந்து விடப்படும் தண்ணீர் ராமகிரி, சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பாய்ந்து வங்க கடலில் கலக்கிறது. பிச்சாட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடும்போது ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆரணி ஆற்றில் உள்ள தரைப்பாலம் மூழ்கி விடுகிறது.

இந்த தரைப்பாலம் வழியாகதான் ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, பூந்தமல்லி போன்ற பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த தரைப்பாலத்தின் மீது மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் 40 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு மேம்பாலம் அமைக்க ரூ.28 கோடியை ஒதுக்கியது. இந்த நிதியை கொண்டு 2018-ம் ஆண்டு மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. மேம்பாலம் இடது புறத்தில் வாகனங்கள் வந்து செல்ல ஏதுவாக 500 மீட்டர் தூரத்துக்கு தற்காலிக தார் சாலை அமைக்கப்பட்டது. சுமார் 452 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலம், 5 மீட்டர் உயரம் கொண்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் 90 சதவீதம் முடிக்கப்பட்டன. சாலையுடன் மேம்பாலம் இணைக்கும் பணிகள் இன்னும் முடியவில்லை.

இந்த நிலையில் நிவர் புயல் காரணமாக பலத்த மழை பெய்ததால் பிச்சாட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமானது. இதனை கருத்தில் கொண்டு கடந்த 25-ந்தேதி பிச்சாட்டூர் அணையில் இருந்து ஆரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதால் ஊத்துக்கோட்டை தரைப்பாலத்தில் அமைக்கப்பட்ட தார்சாலை அடித்து செல்லப்பட்டது. இதனால் ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, பூந்தமல்லி போன்ற பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதன் எதிரொலியாக 30 கிராம மக்கள் ஆற்றை கடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எந்த ஒரு அத்தியாவசிய பொருள் வாங்க வேண்டுமென்றாலும் இந்த கிராம மக்கள் ஆரணி ஆற்றை தாண்டி ஊத்துக்கோட்டை வந்தடைய வேண்டி உள்ளது.

ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் இடையே தூரம் 24 கிலோமீட்டர் ஆகும். ஆனால் தற்போது ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூருக்கு மாற்று வழியில் செல்ல வேண்டுமானால் 48 கிலோ மீட்டர் தூரம் ஆகிறது. ஆனால் ஆற்றை 500 மீட்டர் தூரத்தில் கடந்து விடலாம். 500 மீட்டர் தூரத்தை கடக்க 48 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மேம்பாலம் இருபுறங்களிலும் இரும்பு ஏணிகள் அமைத்து கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று நகர தி.மு.க. செயலாளர் அப்துல் ரஷீத் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் ஊத்துக்கோட்டை தாசில்தார் தேவியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இது குறித்து பரிசீலிப்பதாக தாசில்தார் தேவி உறுதி அளித்தார். அதேபோல் அ.தி.மு.க. நகர செயலாளர் ஷேக் தாவூத் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. கே.எஸ். விஜயகுமாரை சந்தித்து இதேபோன்று கோரிக்கை மனு அளித்தார். மாவட்ட கலெக்டர் பொன்னையா இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story