சம்பள பாக்கி வாங்க வந்தபோது அத்துமீறல்: வேலைக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை; டாக்டர் கைது ஆசைக்கு இணங்க மறுத்ததால், திருடியதாக பொய் புகார் கூறியது அம்பலம்


சம்பள பாக்கி வாங்க வந்தபோது அத்துமீறல்: வேலைக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை; டாக்டர் கைது ஆசைக்கு இணங்க மறுத்ததால், திருடியதாக பொய் புகார் கூறியது அம்பலம்
x
தினத்தந்தி 30 Nov 2020 12:30 AM GMT (Updated: 29 Nov 2020 9:25 PM GMT)

சம்பள பாக்கி வாங்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் உறவினருடன் கைது செய்யப்பட்டார். நகை திருடியதாக பொய் புகார் கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

தாம்பரம், 

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூரை சேர்ந்த 27 வயதுடைய பெண் ஒருவர், தாம்பரம் முடிச்சூர் சாலை சி.டி.ஓ. காலனியை சேர்ந்த டாக்டர் தீபக் (28) என்பவரின் வீட்டில் கடந்த ஒரு வருடமாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி முதல் வேலையில் இருந்து நின்று விட்டார்.

இதற்கிடையே தான் வேலை பார்த்த 18 நாள் சம்பளத்தை வாங்கலாம் என்று நினைத்து நேற்று வீட்டு உரிமையாளரான டாக்டர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த டாக்டர் தீபக் மற்றும் அவருடைய உறவினர் ஆனந்த் அமிர்தராஜ் (35) ஆகிய இருவரும் அந்த பெண்ணுக்கு சம்பள பாக்கி தருவதாக கூறி தனி அறைக்கு அழைத்து சென்று அறையில் பூட்டி வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

சுமார் 4 மணி நேரமாக அறையில் அடைத்து வைத்துவிட்டு, ‘நீ ஆசைக்கு இணங்காவிட்டால் நகையை திருடியதாக போலீசில் பிடித்து கொடுத்து விடுவோம்’ என கூறி மிரட்டியுள்ளனர். ஆனால் அவர்களின் ஆசைக்கு அடிபணியாமல் அவர்களை எதிர்த்து போராடியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த டாக்டர், தனது வீட்டில் வேலை செய்த பெண் நகையை திருடி விட்டார் என்றும், அவரை பிடித்து வைத்திருப்பதாகவும் கூறி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, தாம்பரம் போலீசார் அங்கு விரைந்து சென்று, அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், டாக்டர் தீபக், இளம்பெண் உள்பட 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது பெண்ணின் உடலில் நகக்கீறல்கள் இருந்ததாலும், அவரின் ஆடைகள் கிழிந்து இருந்ததாலும் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரித்தனர். அப்போது சம்பள பாக்கி தருவதாக கூறி டாக்டரும், அவரது நண்பரும் தன்னை பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தான் அடிபணியாததால் நகை திருடியதாக பொய் புகார் கூறியதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் டாக்டர் தீபக் மற்றும் ஆனந்த் அமிர்தராஜ் இருவரிடம் விசாரணை செய்தபோது, அவர்கள் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பெண்கள் மீதான வன்கொடுமை சட்டத்தின் கீழ் டாக்டர் தீபக் மற்றும் அவரது உறவினர் ஆனந்த் அமிர்தராஜ் ஆகியோரை கைது செய்து போலீசார் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story