பெங்களூருவில் போதை மாத்திரைகள் விற்பனை: தனியார் மருத்துவமனை ஊழியர் உள்பட 2 பேர் கைது - கேரளாவை சேர்ந்தவர்கள்
பெங்களூருவில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக தனியார் மருத்துவமனை ஊழியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
பெங்களூரு,
பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள தலைமை தபால் நிலையத்திற்கு கேரளாவில் இருந்து வந்து உள்ள ஒரு பார்சலில், போதை மாத்திரைகள் இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அந்த தபால் நிலையத்திற்கு சென்று அங்கு கேரளாவில் இருந்து வந்த பார்சல்களை பிரித்து பார்த்தனர். அப்போது ஒரு தனியார் மருத்துவமனையின் பெயருக்கு வந்த பார்சலை பிரித்து பார்த்த போது அதில் 400 எல்.எஸ்.டி. போதை மாத்திரைகள் இருந்தன.
அந்த பார்சல் கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்த பார்சல் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஹெப்பகோடி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஊழியரான கேரளாவை சேர்ந்த அருண் அந்தோணி (வயது 22) என்பவரின் பெயருக்கு வந்து இருந்தது. இதையடுத்து அந்த தனியார் மருத்துவமனைக்கு சென்ற போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அருண் அந்தோணியை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அந்த பார்சலை கோட்டயத்தை சேர்ந்த தனது நண்பரான கணேஷ் என்பவர் அனுப்பி வைத்ததாகவும், அமல் பைஜூ என்பவரிடம் கொடுக்க கூறியதாகவும் தெரிவித்தார். ஆனாலும் அருண் அந்தோணியின் மீது சந்தேகம் அடைந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அவரை அழைத்து சென்று தங்கள் அலுவலகத்தில் வைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அப்போது இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை நெதர்லாந்து நாட்டில் இருந்து விமானம் மூலம் வரவழைத்து, பெங்களூருவுக்கு அனுப்பியது தெரியவந்தது. அதாவது நெதர்லாந்தில் இருந்து கேரளாவுக்கு நேரடியாக போதை மாத்திரைகள் சென்று உள்ளன. அங்கிருந்து கணேஷ் பார்சல்கள் மூலம் பெங்களூருவுக்கு அனுப்பி வைத்து உள்ளார். அந்த போதை மாத்திரைகளை அருண் அந்தோணியும், அமல் பைஜூவும் சேர்ந்து பெங்களூருவில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அருண் அந்தோணி கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்பேரில் கணேசையும், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
கைதான 2 பேரிடம் இருந்தும் ரூ.15 லட்சம் மதிப்பிலான 400 எல்.எஸ்.டி. போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் தலைமறைவாக உள்ள அமல் பைஜூவை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story