கார்த்திகை தீபத்திருநாளையொட்டி அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவில் மலை உச்சியில் மகா தீபம்


கார்த்திகை தீபத்திருநாளையொட்டி அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவில் மலை உச்சியில் மகா தீபம்
x
தினத்தந்தி 29 Nov 2020 11:54 PM GMT (Updated: 29 Nov 2020 11:54 PM GMT)

கார்த்திகை தீபத்திருநாளையொட்டி அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் பிரசித்தி பெற்ற ரெத்தினகிரீசுவரர் கோவில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள பாடல்பெற்ற சிவத்தலங்களுள் முதலாவதாக உள்ளது. 1017 படிகள் கொண்ட இந்த மலைக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபதிருநாள் அன்று மகாதீபம் ஏற்றப்பட்டு வழிபடுவது வழக்கம். இதுபோல் கார்த்திகை தீபத்திருநாளான நேற்று சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதன்பின்னர் இக்கோவிலின் மலை உச்சியில் மாலை மகாதீபம் ஏற்றப்பட்டது.

இதுபோல் இக்கோவிலின் அடிவாரம் முதல் மலை உச்சிவரை உள்ள 1017 படிகள் மற்றும் தெப்பக்குளத்தை சுற்றிலும் முக்கிய இடங்களிலும் திரளான பக்தர்கள் விளக்குகளை ஏற்றி வழிபட்டார்கள். பலர் சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர். ரெத்தினகிரீசுவரர் கோவில் மலை உச்சியில் நேற்று ஏற்பட்ட மகா தீபம் நாளை வரை 3 நாட்கள் அணையாமல் எரியும் வகையில் ரெத்தினகிரீஸ்வரர் கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிரிவலம்

இதேபோல் நேற்று பவுர்ணமி என்பதால் பொதுமக்கள் பக்தர்கள் பலர் மலையைச் சுற்றி கிரிவலம் வந்தனர். கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரையும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டன. கார்த்திகை தீபத் திருநாளையோட்டி குளித்தலை நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் பெண்கள் தங்கள் வீடுகளில் பூஜைகள் செய்து வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும், வீட்டின் வாசலிலும் விளக்கேற்றி வழிபட்டனர்.

மேலும் பட்டாசுகள் வெடித்தும், மத்தாப்பு கொளுத்தியும் சிறுவர், சிறுமிகள் மகிழ்ந்தனர். கார்த்திகையையொட்டி குளித்தலையில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு விளக்குகள் ஏற்றப்பட்டது. இந்த பூஜைகளில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். கார்த்திகை திருவிழாவையொட்டி பல கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

தோகைமலை-நொய்யல்

தோகைமலை மலை மீது மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கார்த்திகை திருநாளையொட்டி சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் கோவிலின் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மலை உச்சியில் மகா தீபம் ஏற்பட்ட பிறகு அனைத்து வீடுகளிலும் பெண்கள் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். இதேபோல தோகைமலை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து சிவன் மற்றும் பெருமாள் கோவில்களிலும் மகா தீபம் ஏற்பட்டது. பின்னர் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

தோகைமலை அருகே உள்ள பாதிரிப்பட்டி ஊராட்சி நாகநோட்டக்காரன்பட்டியில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு காளியம்மன் சந்தன கருப்பு கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் கோவில் முன்பாக அமைக்கப்பட்டுள்ள சொக்கப்பனை ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் முன்னிலையில் கொளுத்தப்பட்டது.

புன்னம் சத்திரம் அருகே உள்ள பாலமலை முருகன் கோவிலில் கார்த்திகை திருநாளையொட்டி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பசுபதீஸ்வரர் கோவிலில் நிகழ்ச்சி இல்லை

கரூர் நகரப்பகுதிகளுக்கு உட்பட்ட பெரும்பாலான வீடுகளில் பெண்கள் வீடுகளை கழுவி சுத்தம் செய்து, கோலம் போட்டனர். பின்னர் வீடுகளுக்கு முன்பும், மாடிகளிலும் கார்த்திகை தீபம் ஏற்றினர். இதேபோன்று வணிக நிறுவனங்கள், கோவில்கள் உள்ளிட்ட இடங்களிலும் கார்த்திகை தீபம் ஏற்பட்டது. கரூர் பசுதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தன்று வெகுசிறப்பாக சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். தற்போது கோவிலில் கும்பாபிஷேக நடைபெறுவதற்கான திருப்பணி நடைபெற்று வருகிறது. இதனால் நேற்று எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை.

Next Story