திருக்கார்த்திகை தீப திருவிழா கோலாகலம்: குமரி கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு


திருக்கார்த்திகை தீப திருவிழா கோலாகலம்: குமரி கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு
x
தினத்தந்தி 30 Nov 2020 7:55 AM IST (Updated: 30 Nov 2020 7:55 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட கோவில்களில் நேற்று திருக்கார்த்திகை விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சொக்கப்பனை கொளுத்தி பக்தர்கள் வழிபட்டனர்.

நாகர்கோவில்,

ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரமும், பவுர்ணமியும் சேர்ந்து வருகின்ற தினத்தை திருக்கார்த்திகை தீப திருவிழாவாக இந்துக்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த விழா இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று. இந்த ஆண்டுக்கான திருக்கார்த்திகை தீப திருவிழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்ட கோவில்களில் தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடந்தன.

கோவில்களின் முன் மாகோலமிட்டு அதில் தீபம் ஏற்றினர். அதோடு கோவில் படிக்கட்டுகள், கைபிடி சுவர்கள் மற்றும் கோவில் முழுவதும் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி அலங்கரிக்கப்பட்டு இருந்ததால் இரவில் கோவில்கள் மிகவும் அழகாக ஜொலித்தன. அத்துடன் திருக்கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது.

நாகராஜா கோவில்

நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பட்டுப்போன பனை மரத்தில் காய்ந்த பனை ஓலைகளை கட்டி சொக்கப்பனை கொளுத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷமிட்டனர்.

இதே போல வடிவீஸ்வரம் அழகம்மன் கோவிலிலும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதில் ஆண்களும், பெண்களும் திரளாக கலந்துகொண்டதால் அந்த பகுதி திருவிழா கோலமாக காட்சி அளித்தது.

சுசீந்திரம்

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நேற்று இரவு 7 மணிக்கு சாமி, திருவேங்கடப் பெருமாள், அறம்வளர்த்த நாயகி அம்மன் மற்றும் முருகன் ஆகியோர் வெள்ளி வாகனங்களில் வீதி உலா வந்தனர். அப்போது பக்தர்கள் தெரு வீதிகளிலும், தங்கள் வீடுகளின் முன்பு அகல்விளக்கு ஏற்றி சுவாமியை வரவேற்றனர். சாமி நான்கு ரத வீதிகள் வழியே மேளதாளத்துடன் உலா வந்தார். வடக்கு ரதவீதி வழியே வந்த பொழுது சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் குமரி மாவட்ட கோவில்களில் இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அழகேசன், சதாசிவம், மாவட்ட விவசாய அணி பொருளாளர் ஆக்கோ ஆறுமுகம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச்செயலாளர் நாகசாகி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திக்குறிச்சி

மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி தர்ம சாஸ்தா கோவிலில் திருக்கார்த்திகை விழாவை முன்னிட்டு கொரோனா வைரஸ் தாக்கம் குறையவும், உலக அமைதிக்காகவும் 3,006 தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது. மேலும் கணபதி, தர்ம சாஸ்தா, துர்கா, மாடன், நாகராஜா, நாகலட்சுமி, நாககன்னி போன்ற சாமி சிலைகளுக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடந்தது. தீபத்தால் சபரிமலை அய்யப்பன் கோவில் 18-ம் படி போன்று வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதில் தமிழகம், கேரளாவை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்

இதுபோல் 2 சிவாலயங்களில் 2-வது சிவாலயமான திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

ஆரல்வாய்மொழி

ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை திருவிழாவையொட்டி மாலையில் கோவிலில் தீபம் ஏற்றியும், சொக்கப்பனை எரித்தும் வழிபட்டனர். இதில் பக்தர்கள் சேவா சங்க தலைவர் முத்துக்குமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மாதவலாயம் அருகே சோழபுரம் வேம்படி மாடசாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா நடந்தது. இதையொட்டி மாலையில் கோவில் வளாகத்தில் விளக்கேற்றி, சாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

இதுபோல், தக்கலை அருகே குமாரகோவில் குமாரசாமி கோவில் நேற்று இரவு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதுபோல், வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சாமி கோவில் உள்பட பல கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டு வழிபாடு நடந்தது.

தீபம் ஏற்றி வழிபாடு

திருக்கார்த்திகை விழாவையொட்டி வீட்டு வாசலில் பெண்கள் பல வண்ணங்களில் கோலமிட்டு இருந்தனர். மாலையில் வீட்டை அகல் விளக்குகளால் அலங்கரித்தனர். அதன்பிறகு வாசலில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் அனைத்து வீடுகள் முன்பும் தீபம் ஏற்றப்பட்டு இருந்தது. இது பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

மேலும் திரளி இலை மற்றும் பனை ஓலையில் கொழுக் கட்டை செய்து உறவினர்களுக்கு பகிர்ந்தளித்து உண்டு மகிழ்ந்தனர். அதோடு பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் திருக்கார்த்திகை விழாவை கொண்டாடினார்கள். அழகப்பபுரம் பகுதியில் திருக்கார்த்திகையையொட்டி மத வேறுபாடு இல்லாமல் பொதுமக்கள் தங்கள் வீட்டின் தலைவாசலிலும், முற்றத்திலும் அகல்விளக்குகளை ஏற்றினர்.

மருந்துவாழ்மலை

கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி வைகுண்டபதியில் அமைந்துள்ள 1800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக காலை மருந்துவாழ் மலைஅடிவாரத்தில் இருந்து 1800 அடி உயரமுள்ளமருந்துவாழ்மலைஉச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 100 குடம் எண்ணையை மருந்துவாழ்மலை உச்சிக்கு ஊர்வலமாக எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதை பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி தொடங்கி வைத்தார். விசுவ இந்து பரிஷத் தலைவர் ஜெகன், பா.ஜனதாவை சேர்ந்த கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர். மலையில் உள்ள பரமார்த்தலிங்க சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜையும் நடந்தது. மாலையில் மருந்துவாழ்மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதே போல கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நேற்று இரவு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

குபேர மலையில் தீபம்

கன்னியாகுமரி அருகே பொட்டல் குளம் குபேர மலையில் அய்யப்ப சாமி கோவில் அருகே உள்ள மூலிகை தியான மண்டபத்தில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி மாலையில் உடல்நல யோகாசனம், மனநிலை யோகாசனம் மற்றும் தியான பயிற்சி நடைபெற்றது. பின்னர் நாட்டு மக்கள் கொரோனா பயம் நீங்கி நலமாக வாழ வேண்டி குபேர மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திரைப்பட தயாரிப்பாளரும், கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவருமான பி.டி. செல்வகுமார் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் நகரசபை முன்னாள் தலைவி மீனாதேவ் கலந்துகொண்டு தீபத்தை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலப்பை மக்கள் இயக்க சட்ட ஆலோசகர் வக்கீல் பாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் சிவபன்னீர்செல்வம், செயலாளர் ஜான்கிறிஸ்டோபர், அய்யப்பசாமி கோவில் நிர்வாகி தியாகராஜசுவாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story