ஏழை மாணவர்களின் டாக்டர் கனவை நிறைவேற்றி முதல்-அமைச்சர் சாதனை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம்


ஏழை மாணவர்களின் டாக்டர் கனவை நிறைவேற்றி முதல்-அமைச்சர் சாதனை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம்
x
தினத்தந்தி 30 Nov 2020 11:04 AM IST (Updated: 30 Nov 2020 11:04 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளியில் படித்த ஏழை மாணவர்களின் டாக்டர் கனவை நிறைவேற்றி முதல்-அமைச்சர் சாதனை படைத்து உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதத்துடன் கூறினார்.

கோவை,

கோவை மாவட்டம் மதுக்கரை தாலுகா குரும்பபாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின்படி மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா, இ.ஏ.பழனிச்சாமி கவுண்டர் நினைவு கலையரங்கம் அமைக்க பூமி பூஜை, ஆவின் நிறுவனம் 22 பயனாளிகளுக்கு ரூ.4.84 லட்சத்தில் மின்விசையால் இயங்கும் புல்வெட்டும் எந்திரம் வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது.

எட்டிமடை சண்முகம் எம்.எல்.ஏ. வரவேற்றார். தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை மற்றும் வெள்ளை கோட்டு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் இ.ஏ.பழனிச்சாமி கவுண்டர் நினைவு கலையரங்கம் அமைக்க பூமிஜை செய்தும், ஆவின் நிறுவனத்தின் சார்பில் ரூ.4.84 லட்சம் மதிப்பிலான புல் வெட்டும் எந்திரங்களை 22 பயனாளிகளுக்கு வழங்கியும் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

7.5 சதவீத உள்ஒதுக்கீடு

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவ-மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றினார். இதன் மூலம் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் ஏழை-எளிய மாணவ-மாணவிகளும் மருத்துவ கல்லூரிகளுக்கு செல்லும் நிலை உருவாக்கப்பட்டு உள்ளது.

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின்படி, நடப்பாண்டில் அரசு மருத்துவ கல்லூரிகள் மூலம் 227 இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகள் மூலம் 86 இடங்கள் என மொத்தம் 313 இடங்கள் கிடைக்கும். இதேபோன்று அரசு பல் மருத்துவ கல்லூரிகள் மூலம் 12 இடங்களும், சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகள் மூலம் 80 இடங்களும் என மொத்தம் 92 இடங்கள் கிடைக்கும்.

15 மாணவர்கள்

கோவை மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் பயின்று நீட் தேர்வில் 21 மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றனர். 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில், மாவட்டத்தில் 15 மாணவ-மாணவிகள் மருத்துவபடிப்பு மற்றும் பல் மருத்துவப்படிப்பில் சேருவதற்கு இடம் கிடைத்து உள்ளது.

அரசு பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்களின் டாக்டர் கனவை நிறைவேற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாதனை படைத்து உள்ளார். அதன்படி, கோவை மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயின்று 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ள மாணவ-மாணவிகளுக்கு கல்விகட்டணம், விடுதிகட்டணங்களை அரசே ஏற்கும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

விழாவில் கலெக்டர் ராஜாமணி, ஆவின் தலைவர் கே.பி.ராஜு, மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அதிகாரி ராமதுரைமுருகன், மாவட்ட திட்ட இயக்குனர், ரூபன்சங்கர்ராஜ், மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உஷா, பேரூர் கல்வி மாவட்ட அதிகாரி ரமேஷ், எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்ட அதிகாரி கீதா, தலைமை ஆசிரியர் பாலன், வெள்ளலூர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story