கார்த்திகை தீப திருவிழா: கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது + "||" + Karthika Deepa Festival: Chokappana was lit at the Pataleeswarar temple in Cuddalore
கார்த்திகை தீப திருவிழா: கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
கார்த்திகை தீப திரு விழாவையொட்டி கடலூர் பாடலீஸ்வரர்கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
கடலூர்,
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும், பின்னர் சங்கு மண்டபத்தில் பஞ்சமூர்த்திகளுக்கு கலசங்கள் வைத்து பூஜை செய்து, ஹோமம் நடைபெற்றது.
அதையடுத்து உற்சவர் பாடலீஸ்வரருக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து விநாயகர், பாடலீஸ்வரர், பெரியநாயகி, சண்முகர் மற்றும் சண்டிகேஸ்வரர் சன்னதிகளில் தீபம் ஏற்றி, ஆலயத்தை சாமிகள் வலம் வந்தது. இதைத்தொடர்ந்து கோவில் வாசலில் வைக்கப்பட்ட சொக்கப்பனைக்கு பூஜை செய்து, கொளுத்தப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்களும் கோவிலில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
இதேபோல் கடலூர் புதுக்குப்பம் காவலர் குடியிருப்பில் உள்ள பராசக்தி மாரியம்மன்கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் சாமிக்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் முன்பு வைக்கப்பட்ட சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இது தவிர பல்வேறு கோவில்களில் நேற்று சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. வீடுகளிலும் அகல் விளக்கு ஏற்றி பொதுமக்கள் வழிபட்டனர். வர்த்தக நிறுவனங்களிலும் அகல் விளக்கு ஏற்றப்பட்டது.
விருத்தாசலம்
இதேபோல் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி விருத்தாசலம் இரட்டை தெரு உள்பட நகரில் உள்ள முக்கிய தெருக்களில் பொதுமக்கள் தங்களது வீடுகள் முன்பும், அருகில் உள்ள கோவில்களிலும் அகல் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர். மேலும் சிறுவர்கள் பட்டாசு வெடித்தும், கார்த்திகை தீப சுருளை சுற்றியும் தீப விழாவை கொண்டாடினார்கள்.
பண்ருட்டி
பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மூலவரான வீரட்டானேஸ்வரருக்கும், பெரியநாயகி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. முன்னதாக சன்னதிகள் முன்பு மகா தீபம் ஏற்றப்பட்டதோடு, கோவில் வளாகத்தில் அகல் விளக்குகள் மூலம் ஓம் நமச்சிவாய என்றும் அமைக்கப்பட்டிருந்தது. இதில் சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் சென்றதோடு, சாமியை தரிசனம் செய்தனர்.