விழுப்புரம் மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த ஏரி, கால்வாய்களை கலெக்டர் ஆய்வு


விழுப்புரம் மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த ஏரி, கால்வாய்களை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 30 Nov 2020 11:24 AM IST (Updated: 30 Nov 2020 11:24 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் மழையால் சேதம் அடைந்த ஏரி மற்றும் கால்வாய்களை கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக பெய்த கனமழையினால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் காணை அருகே உள்ள கல்பட்டு ஏரி நிரம்பி உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த இடத்தில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, கல்பட்டு ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏரியை 24 நேரமும் கண்காணிக்க சம்பத்தபட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து காணை, பெரும்பாக்கம், கோனுார், கொத்தமங்கலம் உள்ளிட்ட இடங்களில் மழையால் பாதிக்கபட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், காணை வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவாசகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

பம்பையாற்று வாய்க்கால்

அதேபோல் விக்கிரவாண்டி அருகே பொதுப்பணித் துறைக்கு சொந்தமான தொரவி ஏரிக்கு நீர் வரத்து வரக் கூடிய பம்பையாற்று வாய்க்காலில் மண்டபம் அருகே உடைப்பு ஏற்பட்டது. அதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், தொரவி கிராம பொதுமக்கள் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக சீரமைத்தனர். இதை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு, நீர் வரத்து குறித்த விவரத்தை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து விக்கிரவாண்டி அடுத்த வி.மாத்தூர் தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்ட கலெக்டர் அண்ணாதுரை நீர் மட்டம் மற்றும் பாசன விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அந்த பகுதியில் உள்ள விவசாயிகளிடம் மழையினால் பயிர்கள் சேதமடைந்துள்ளதா? என கேட்டறிந்தார். அப்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜவகர், உதவி செயற்பொறியாளர் சுமதி, உதவி பொறியாளர் ஞானசேகரன் மற்றும் பொதுப் பணித்துறை பணியாளர்கள், விவசாயிகள் உடன் இருந்தனர்.

Next Story