பரமக்குடியில் விசாரணை கைதி இறந்த வழக்கு: ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கைது


ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி
x
ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி
தினத்தந்தி 1 Dec 2020 2:22 AM IST (Updated: 1 Dec 2020 2:22 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடியில் விசாரணை கைதி இறந்த வழக்கில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

திருட்டு வழக்கு
மதுரையை சேர்ந்தவர் ராமானுஜன் மகன் வெங்கடேசன் (வயது 26). இவர் திருட்டு வழக்கு தொடர்பாக கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி எமனேசுவரம் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு, போலீசார் தாக்கியதில் அவர் இறந்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பரமக்குடி நகர் போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி ஓய்வு பெற்று விட்டார்.

இந்த நிலையில் விசாரணை கைதி வெங்கடேசன் இறந்தது தொடர்பாக முதுகுளத்தூர் அருகே உள்ள ஏனாதி பகுதியில் வசித்து வந்த முனியசாமியை (வயது 65) நேற்று ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் கைது செய்தார். ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண்-2 நீதிபதி ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட முனியசாமியை நீதிபதி 15 நாட்கள் சிறை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

சிறையில் அடைப்பு
இதைத்தொடர்ந்து அவர் விருதுநகர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தற்போது நயினார்கோவில் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் ஞானசேகரன், முதுகுளத்தூர் போலீஸ் தனிப்பிரிவு காவலர் கிருஷ்ணவேல் மற்றும் சாயல்குடி போலீஸ் தனிப்பிரிவு காவலர் கோதண்டராமன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Next Story