எழுதப்படிக்க தெரியாதவர்களுக்கு கற்பிக்க புதிய திட்டம்: கலெக்டர் கண்ணன் தகவல்


விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன்
x
விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன்
தினத்தந்தி 30 Nov 2020 9:56 PM GMT (Updated: 30 Nov 2020 9:56 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் எழுதப்படிக்க தெரியாதவர்களுக்கு கற்பிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படுகின்றது என கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதிய திட்டம்
தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் கற்போம் எழுதுவோம் இயக்கம் என்கிற புதிய வயது வந்தோர் கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பில் நடப்பு கல்வி ஆண்டில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதவும், படிக்கவும் தெரியாதவர்களுக்கு அடிப்படை கல்வியறிவை வழங்கிடும் நோக்கத்தில் முதல் கட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

8,000 பேர்
இத்திட்டத்தின் கீழ் அடிப்படை கல்வி அறிவை வழங்கிடும் வகையில் 8 ஆயிரத்து 375 கல்லாதோர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்காக 419 மையங்கள் வட்டாரங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையங்கள் நேற்று முதல் செயல்பட தொடங்கியுள்ளன. இணையங்களில் எழுதப்படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை கல்வியறிவை புகட்டிட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எழுதப்படிக்க தெரியாதவர்கள் அடிப்படை கல்வி பெற வாய்ப்பு ஏற்படும். தொடர்ந்து எழுதப்படிக்க தெரியாதவரை கண்டறிந்து அவர்களுக்கு அடிப்படை கல்வியை கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வேண்டுகோள்
எனவே எழுதப்படிக்க தெரியாதவர்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ள மையங்களுக்கு சென்று பயனடையுமாறு வேண்டுகிறேன்.

மாவட்டத்திலுள்ள வயது வந்தோர் அனைவரும் அடிப்படை கல்வி அறிவு பெற்றிட மாவட்டம் முழுக்க தெளிவு பெற்ற மாவட்டமாக மாறுவதற்கும் அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story