2021-22-ம் ஆண்டுக்கான ரூ.10,300 கோடி வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் வெளியிட்டார்


2021-22-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டபோது எடுத்த படம்
x
2021-22-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டபோது எடுத்த படம்
தினத்தந்தி 1 Dec 2020 4:48 AM IST (Updated: 1 Dec 2020 4:48 AM IST)
t-max-icont-min-icon

2021-22-ம் ஆண்டுக்கான ரூ.10 ஆயிரத்து 300 கோடி வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டார்.

கலெக்டர் வெளியிட்டார்
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நபார்டு வங்கியின் மூலம் 2021-22-ம் ஆண்டிற்கான ரூ.10 ஆயிரத்து 300 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி, வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார்.

பின்னர் அவர் கூறுகையில், தமிழகத்தின் ஊரக மற்றும் வேளாண் வளர்ச்சி பணியில் முக்கிய பங்கு வகிக்கும் நபார்டு வங்கி கடலூர் மாவட்டத்தில் கிடைக்க பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம் ரூ.10 ஆயிரத்து 300 கோடியே 80 லட்சம் அளவுக்கு கடனாற்றல் உள்ளது என மதிப்பீடு செய்துள்ளது. விவசாயத்தில் நீண்டகால கடன் வழங்குவதற்கான சாத்திய கூறுகளை இத்திட்டம் விளக்குகிறது.

கட்டுமான வசதிகள்
இது போன்ற கடன் வசதிகள் விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி விவசாயத்தை ஒரு லாபகரமான வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட உதவும். இக்கடன் திட்ட அறிக்கை, பல அரசு துறைகள், வங்கிகள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் புள்ளி விவர அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் மத்திய அரசின் நோக்கத்தையும் கருத்தில் கொண்டு இந்த வளம் சார்ந்த கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையின் உதவியுடன் கடலூர் மாவட்டத்திற்கான வருடாந்திர கடன் திட்டம் முன்னோடி வங்கி மூலம் தயாரிக்கப்படும் என்றார்.

இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெயக்குமார், மாவட்ட வளர்ச்சி மேலாளர்(நபார்டு) எம்.விஜய்நீகர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அகிலன், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் விஜயலட்சுமி மற்றும் வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story